கரூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் யாராவது கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவிப்பு போர்டு வைத்திருக்கிறார்கள் கரூர் போலீசார்.
ஜவுளி மற்றும் கொசுவலை உற்பத்தியில் பிரதான நகரமான கரூரில், தொழிற்கூடங்களும் அதில் பணிபுரியும் தொழிலாளர்களும் அதிகம். தொழிலாளர்கள், இளைஞர்களைக் குறிவைத்து தான் இந்த கஞ்சா விற்பனை நடக்கிறது. கரூர் நகர காவல் நிலையம், வெங்கமேடு, பசுபதிபாளையம், தாந்தோன்றிமலை காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாகச் செய்யப்படுகிறது. பல காவல் அதிகாரிகள் மாமூல் வாங்குவதால் கண்டு கொள்வதில்லை. இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகவலனுக்கு ரகசியத் தகவல் கிடைத்து வருவதால், அதன் அடிப்படையில் அவர் அவ்வப்போது போலீசாருடன் அதிரடி சோதனை நடத்துகிறார்.
இந்த மாதத்தில் மட்டும் தற்போது வரை 26 நபர்களைக் கைதுசெய்து அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளார். இந்த நிலையில் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடை செய்யவும், கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை செய்து கரூர் மாவட்ட காவல் துறையின் சார்பில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெங்கமேடு மேம்பாலம், 5 ரோடு, வஞ்சியம்மன் கோவில் தெரு, ரத்தினம் சாலை, லைட்ஹவுஸ் கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் கஞ்சா விற்பனை செய்தாலோ, வைத்திருந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அது போன்ற செயல்பாடுகள் தெரிய வந்தால், கரூர் நகர காவல் நிலையத்திற்கும், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கும் தகவல் தெரிவிக்கும்படி அதன் செல்ஃபோன் எண் கொடுக்கப்பட்டுள்ளது.
போலீசே போர்டு வைக்கிறது என்றால் கரூரில் கஞ்சா கனஜோர்தான்...!