Skip to main content

நாடக நடிகர்களுக்கு முதியோர் இல்லம் கட்ட 5 ஏக்கர் நிலம் தானம்! நடிகர் கருணாஸ் வாக்குறுதி!

Published on 07/06/2019 | Edited on 07/06/2019

 

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் பாண்டவர் அணி பெயரில் தற்போது தலைவராக உள்ள நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் கருணாஸ் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். 


இதே அணி சார்பில் மற்றொரு துணைத்தலைவர் பதவிக்கு பூச்சி முருகன் போட்டியிடுகிறார். இந்த அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் மாவட்டந்தோறும் சங்க நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். 

 

k

 

இந்நிலையில், நடிகர் கருணாஸ் எம்எல்ஏ., சேலம் மாவட்ட நாடக நடிகர்களை வியாழக்கிழமை (ஜூன் 6), நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது அவர் கூறியது: தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம், பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் 30 சதவீத கட்டுமானப் பணிகள் இருக்கின்றன. இப்பணிகள் அனைத்தும் ஆறு மாதத்திற்குள் முடிந்து விடும். 


நலிவடைந்த நாடக நடிகர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிர்வாகம் தொடர பாண்டவர் அணியை மீண்டும் வெற்றிபெறச் செய்ய வேண்டும். 


இங்குள்ள மிகவும் நலிவடைந்த உறுப்பினர்களுக்கு 3 சென்ட் நிலம் கொடுப்பதாக கடந்த முறை கூறியிருந்தேன். இடையில் பல பின்னடைவுகள் ஏற்பட்டு விட்டன. அதை நான் நிச்சயமாக வழங்குவேன். அதேபோல் வயதான நடிகர்களுக்கு முதியோர் இல்லம் கட்டித்தருவதாகச் சொல்லி இருந்தேன். அதற்காக திண்டுக்கல்லில் எனக்குச் சொந்தமாக உள்ள 5 ஏக்கர் நிலத்தை கொடுக்கிறேன். அதில் தென்னிந்திய நாடக நடிகர்கள் முதியோர் இல்லம் கட்ட இந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு கருணாஸ் கூறினார்.

சார்ந்த செய்திகள்