கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை நகருக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தபடியே இருக்கின்றன. அப்படி வரும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படுவது வழக்கம். அதற்கு காரணம், நகராட்சி சார்பில் அமைக்கப்படும் தண்ணீர் டேங்க்குகளில் தண்ணீரை நிரப்பினாலும் அது காலியான பின் திரும்ப நிரப்ப முடியாத அளவுக்கு பக்தர்களின் கூட்டம் உள்ளதுதான்.
இதேபோல் அன்னதானம் வழங்குவதற்கும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மாவட்ட நிர்வாகம். அன்னதானம் வழங்கும் இடத்திலேயே சமைக்ககூடாது என்கிற கட்டுப்பாடு அன்னதான குழுவுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. ஒருயிடத்தில் சமைத்து அன்னதானம் வழங்கும் இடத்துக்கு கொண்டு செல்வதில் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையில் திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் கடந்த சில ஆண்டுகளாக அன்னதானம் வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் பேருக்கு கட்சி அலுவலகத்திலேயே சமைத்து, அதனை பாக்கெட் செய்து கிரிவலப்பாதையின் சில இடங்களை தேர்வு செய்து அங்கு வைத்து வழங்குகின்றனர்.
இந்த ஆண்டு தீப திருவிழா அன்று, அன்னதானத்தை திமுக மா.செவும், திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏவுமான முன்னால் அமைச்சர் எ.வ.வேலு கட்சி நிர்வாகிகளுடன் சென்று, பக்தர்களுக்கு உணவு வழங்குவதை தொடங்கி வைத்தார். திமுகவினரை இந்து மதத்துக்கு எதிரானவர்களாக ஒருபுறம் சித்தரிக்கப்பட்டு வரும் நிலையில், பக்தர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் அன்னதானம் வழங்குவது வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களை ஆச்சர்யப்படுத்தியது.