தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ளது கண்ணகி கோயில். வருடம் தோறும் சித்திரை முழு நிலவு நாளில் கொண்டாடப்படும் கண்ணகி திருவிழா பிரசித்தி பெற்றது. உலகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கண்ணகி கோயில் திருவிழாவில் கலந்துகொள்வர். தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் இணைந்து, கண்ணகி திருவிழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்வர். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கண்ணகி கோயில், மத்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலைப் பராமரிக்கும் பொறுப்பு கேரள தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிதிலமடைந்து காணப்படும் கண்ணகி கோயிலை புணரமைப்பு செய்ய வேண்டும் என பக்தர்களும், மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகளும் பல ஆண்டுகளாக வலியுறுத்திவருகின்றனர்.
இதற்கு, கேரள தொல்லியல் துறை இணக்கம் தெரிவித்தாலும், கோயில் இருக்கும் இடம் பெரியாறு புலிகள் சரணாலயம் என்பதால், கேரள வனத்துறை அனுமதி மறுத்துவந்தது. இதையடுத்து, மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, 'கேரள தொல்லியல்துறை கோயிலை புணரமைக்க வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவிட்டது. புணரமைப்புக்கான முதல்கட்ட வேலைகளைத் தொல்லியல்துறை செய்தது. மொத்த மதிப்பீடும் தயார் செய்யப்பட்டது. இருந்தபோதும் பணிகள் தொடங்க கேரள வனத்துறை தொடர்ந்து அனுமதி மறுத்துவந்தது.
இப்படியான சூழலில், நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கண்ணகி கோயில் புணரமைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கேரள தொல்லியல்துறை, வனத்துறை, திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் கலந்துகொண்டனர். ’சிதிலமடைந்த கோயிலை புணரமைக்கும் வேலைகளை தொல்லியல்துறை செய்ய வேண்டும். இதற்கு, வனம் மற்றும் வருவாய்த்துறையினர் தேவையான உதவிகளைச் செய்துகொடுக்க வேண்டும். புதிதாக கண்ணகி சிலையை செய்து, கோயிலில் வைக்கும் வேலையை திருவிதாங்கூர் தேவசம் போர்டு செய்யும்' என முடிவெடுக்கப்பட்டது. முதல்வர் பினராயி விஜயனின் இந்த அதிரடி முடிவால் விரைவில் கோயில் புணரமைப்புப் பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் தமிழகத்தில் உள்ள கண்ணகி கோவிலில் பக்தர்கள் ஏற்கனவே லோயர் கேம்ப் வனப்பகுதியில் சாலை அமைத்து கோவிலை புதுப்பிக்க வேண்டும் என அரசுக்கு பல வருடங்களாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். அப்படி இருக்கும் போது திடீரென கேரள முதல்வர் கண்ணகி கோவிலை புதுபிக்க போவதாக அறிவித்தது தேனிமாவட்டத்தில் உள்ள கண்ணகி கோவில் பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.