Skip to main content

“தேர்தல் அறிக்கை கதாநாயகியாகக் கூட இருக்கலாம்” - கனிமொழி எம்.பி.

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Kanimozhi MP spoke about the DMK election manifesto

நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கனிமொழி எம்.பி. தலைமையில் சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பி.டி.ஆர், டி.ஆர்.பி. ராஜா, டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி, எம்.எல்.ஏ. எழிலன், மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி., “முதலில் தேர்தல் அறிக்கை குழு, தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்கு இருக்கக்கூடிய மக்கள், பல்வேறு தொழில்கள் செய்யக் கூடியவர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள் எனப் பலரையும் சந்தித்து அவர்களின் கோரிக்கையை கேட்கவுள்ளோம். அப்படி அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டறிந்து மீண்டும் சென்னைக்கு வந்த பிறகு, ஒன்று கூடித் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதாக முடிவெடுத்துள்ளோம். அதன்படி முதலில் எந்தெந்த ஊர்களுக்கு செல்லப் போகிறோம் என்ற பட்டியலை இன்று முடிவு செய்திருக்கிறோம். இதனை முதல்வரிடம் காட்டி ஒப்புதல் பெற்று அடுத்தகட்ட முடிவை எடுக்கவுள்ளோம். அங்கு சேகரிக்கும் கோரிக்கைகள் குறித்து அடுத்தடுத்த கூட்டங்களில் ஆலோசிக்கவுள்ளோம்” என்றார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், திமுகவின் கதாநாயகனாக எந்த மாதிரியான விஷயம் இருக்கும் என்று கேள்வி எழுப்ப, தேர்தல் அறிக்கை கதாநாயகியாக கூட இருக்கலாம் என்று பதிலளித்துவிட்டு கிளம்பிச் சென்றார்.

சார்ந்த செய்திகள்