Skip to main content

கள்ளக்குறிச்சி பள்ளி எரிப்பு வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Kallakurichi school incident case High Court action order

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் - செல்வி தம்பதியரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி மர்மமான முறையில் மாடியில் இருந்து விழுந்து மரணம் அடைந்தார். இதற்கு நீதிகேட்டு பெரியளவில் போராட்டம் நடைபெற்றது. அது பள்ளிக்குள் கலவரமாக மாறியது. மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு ஸ்ரீமதி வழக்கு எனத் தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில். “இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் கால தாமதம் ஏற்படுகிறது. மேலும் இந்த விசாரணை நேர்மையான முறையில் நடைபெறவில்லை. பள்ளியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்கப்பட வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் இன்று (03.07.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை அடுத்து ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில் 4 மாதங்களில் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த 4 மாதக்காலத்திற்குள் சிபிசிஐடி போலீசார் விசாரணையை முடிக்காவிட்டால் மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடரலாம். பள்ளியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்கவும் புலன் விசாரணை அதிகாரிக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

காலி மது பாட்டில்களைத் திரும்பப்பெறும் திட்டம்; டாஸ்மாக் நிர்வாகம் புதிய தகவல்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Tasmac New Information about Empty Bottle Take Back Scheme

டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் வனப்பகுதிகள் மற்றும் மலைப்பிரதேசங்களில் அமைந்துள்ள சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலி மதுபானப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி மதுபானத்தின் விலையை விடக் கூடுதலாக பத்து ரூபாய் செலுத்தி மதுபானப் பாட்டில்களை வாங்கிவிட்டு அதன் பின்னர் காலி மதுபானப் பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும்போது  கூடுதலாக வசூலிக்கப்பட்ட 10 ரூபாயைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்பதாகும்.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பரத சக்ரவர்த்தி, சதிஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (05.07.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு 250 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டறிந்த நீதிபதிகள் தமிழகத்தில் ஒரு நாளைக்கு எத்தனை மதுபானப்பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது எனக் கேள்வி எழுப்பினர். 

Tasmac New Information about Empty Bottle Take Back Scheme

அதற்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், “ஒரு நாளைக்குச் சராசரியாக 70 லட்சம் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதோடு இத்திட்டம் மூலம் கணிசமான வருவாயும் ஈட்டமுடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது டாஸ்மாக் நிறுவனம் சார்பில், “தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Next Story

கரூரில் சிபிசிஐடி விசாரணை நிறைவு

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
CBCID investigation completed in Karur

கரூரில் சிபிசிஐடி போலீசார் 3 இடங்களில் சோதனையில் ஈடுபட்ட நிலையில் தற்போது சோதனை முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்துள்ளனர்' என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு 14 தனிப்படைகள் அமைத்து இந்தியா முழுவதும் தேடிவந்த நிலையில் இன்று காலை முதல் அவருடைய ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

CBCID investigation completed in Karur

இன்று கரூர் மணல்மேடு அடுத்துள்ள கூலிநாயக்கனூர் என்ற இடத்தில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளரும், பெட்ரோல் பங்க் ஊழியருமான யுவராஜ் என்பவரது வீட்டில் இன்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் இந்தச் சோதனையானது நடைபெற்றது. அதேபோல் தோட்டக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பேரூர் அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் செல்வராஜ் மற்றும்  புதூர் பகுதியில் உள்ள ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வீடுகளில் சோதனையானது நடைபெற்றது. இந்நிலையில் திருச்சி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் 2 மணி நேரங்களுக்கு மேலாக நடத்திய விசாரணையை முடித்துக் கொண்டு புறப்பட்டனர்.