Skip to main content

கலைஞர் நூற்றாண்டு மருத்துவ முகாம்; 1.88 லட்சம் பேர் பயன் 

Published on 25/06/2023 | Edited on 25/06/2023

 

kalaignar centranary year medical camp 

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று 103 இடங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் சென்னை மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாமை திறந்து வைத்தார். இலவச மருத்துவ முகாம்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சிகிச்சையும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, இருதய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் பெண்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டன. இதற்காகச் சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.

 

இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் 103 இடங்களில் கலைஞர் நூற்றாண்டு மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் பதிவு செய்து பரிசோதித்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை 1,88,885 பேர் ஆகும். இம்மருத்துவ முகாமில் சித்தா மற்றும் இந்திய மருத்துவத்திற்காகப் பதிவு செய்து பரிசோதனை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை 35,138 பேர் ஆகும். நேற்று நடைபெற்ற மருத்துவ முகாமில் பல்வேறு மருத்துவத் துறைகள் அமைக்கப்பட்டு இருந்தது” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்