Skip to main content

கஜா புயலில் உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலயமும் தப்பவில்லை - படங்கள்

Published on 16/11/2018 | Edited on 16/11/2018



 

நாகப்பட்டினம் கடலோரத்தில் 150 ஆண்டுகள் பழமை கொண்ட வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயம் இருக்கிறது. அங்கு உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் வந்து செல்வார்கள். கஜா புயலின் தாக்கத்தால் ஆலயத்தில் உள்ள முக்கிய இடங்கள் சிதலமடைந்து இருக்கிறது. 
 

150 ஆண்டுகள் பழமை கொண்ட மாதா ஆலயத்தின் கோபுர சிலுவை உடைந்து கீழே விழுந்துள்ளது. பழைய வேளாங்கண்ணி ஆலயத்திற்கு செல்லும் வழியில் உள்ள விண்மீன் ஆலய வளாகத்தில் சமீபத்தில் கட்டப்பட்ட  55 அடி உயரம் கொண்ட திரு இருதய ஆண்டவர் சிலையின் கைப்பகுதி முற்றிலுமாக சேதமடைந்து கீழே விழுந்துள்ளது. 
 

ஆலயப்பகுதிகளில் உள்ள  பெரும்பாலான மரங்கள் முறிந்து வேரோடு சாய்ந்துள்ளது. மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது தண்ணீர் பற்றாக்குறையும் நிலவும்சூழல் ஏற்பட்டுள்ளது.
 

இதுகுறித்து வேளாங்கண்ணி திருத்தல பேராலய பங்குதந்தை சூசைமாணிக்கம் கூறுகையில், "சுனாமிக்கு பிறகு வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் சந்தித்த பாதிப்பு கஜா புயல் பாதிப்புதான்.
 

கஜா புயலை எதிர்கொள்வதற்கு அரசு முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூறியிருந்தனர். அதற்கு ஏற்ப நாங்களும் வெளி மாவட்ட, வெளி மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் ஏதுவாக குடிநீர், உணவு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தயார் நிலையில் வைத்திருந்தோம். 
 

நேற்று முதல் உள்ளூர் வெளியூர் சுற்றுலா, மற்றும் பக்தர்களுக்கு உணவு மற்றும் குடிநீர், உடமைகள் பேராலய நிர்வாகத்தின் சார்பில் இலவசமாக வழங்கி வருகிறோம். இருந்தும் எதிர்பாராதவிதமாக புயலின் தாக்கம் அதிகமானதால் மின்சாரம் முற்றிலுமாக தடைபட்டுவிட்டது. ஆங்காங்கே மின் வயர்கள் சேதமடைந்திருப்பதால்  தண்ணீர் தேவையே சரிசெய்து கொடுக்கும் பணிகள் சிறு தடைகள் ஏற்பட்டுள்ளது.
 

இந்நிலையில் அதற்கு பேராலய நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை முழுவீச்சில் செய்துவருகிறது. குறிப்பாக வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்திருக்கும் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
 

இதுமட்டுமின்றி தேவையான அனைத்து வசதிகளையும் முழுமையாக செய்து கொடுப்பதற்கு அரசு அதிகாரிகளின் துணையோடு பேராலய நிர்வாகம் செய்து வருகிறது" என்றார் அவர்.
 

 

 


 

சார்ந்த செய்திகள்