இந்த வருடத்திற்கான மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 20 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது.
மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்பாக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் ஜூலை 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்தக் கூட்டத்தின் போது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கும், இதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் மத்திய அரசு கோரிக்கை வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் வரும் ஜூலை 14 ஆம் தேதி திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளதாகக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் எழுப்ப வேண்டிய கோரிக்கைகள் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.