
அண்மையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அரங்கம் ஒன்றில் போலியாக நிறுவனம் ஒன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது தொடர்பான புகார்கள் பூதாகரமாகின. நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, யூடியூப் பிரபலங்கள் கோபி, சுதாகர், நடன இயக்குனர் சாண்டி உள்ளிட்ட பலருக்கு அந்த நிறுவனம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியிருந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் விருந்தினராகக் கலந்து கொண்டதால் அண்ணா பல்கலைக்கழகம் அரங்கத்தில் நிகழ்ச்சி நடத்திக் கொள்ள அனுமதித்ததாக அண்ணா பல்கலைக்கழகத் தரப்பு தெரிவித்தது. அதேபோல் அந்த விழாவில் தான் சிறப்பு விருந்தினராக மட்டுமே தான் கலந்துகொண்டதாக வள்ளிநாயகம் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், ''அண்ணா பல்கலைக்கழகம் புனிதமான இடம். இந்த இடத்தில் இது போன்று போலியான விருதுகள் வழங்கும் விழா நடந்திருப்பது தவறானது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இனி தனியார் அமைப்பு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது' எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொழில்நுட்ப தமிழ் வளர்ச்சி மையம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை இணைந்து நடத்தும் இரண்டு நாள் பயிலரங்கம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட துணைவேந்தர் வேல்ராஜ், ''இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது தாய் மொழியில் கல்வி கற்காமல் இருப்பதுதான். தாய்மொழியில் கல்வி கற்றால் மட்டுமே புதிய சிந்தனைகள் தோன்றும்'' என்றார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''30 வருடத்திற்கு முன்னாடியே யுஎஸ்ஏவில் இருந்து 50 டாலர்கள் கேட்கிறார்கள் என்று கொடுத்திருந்தேன். அதன் பிறகு எனக்கு ஒரு 300 விருதுகள் வந்திருக்கும். அதை அப்படியே தூக்கி வைத்து விடுவேன். விருதுகள் வழங்கும் விழாவில் நான் பார்த்தது என்னவென்றால் ஒரு இரண்டு பேர்தான் அந்த விருதுக்கான தகுதியானவர்களாக இருப்பார்கள். அவர்களை கூப்பிட்டால் வருவார்கள். ஆனால் அங்கு இரண்டு பேருக்கு பதிலாக 50 பேருக்கு விருதுகள் கொடுத்திருப்பார்கள். மற்றவர்கள் அந்த விருதை வாங்குவதற்கு தகுதியானவர்களாக இருக்க மாட்டார்கள். அங்கு சென்ற பிறகு விருதுக்கு தகுதியானவர்கள் கூட ஏன்டா இங்கு வந்தோம் என்று தான் நினைப்பார்கள். பணம் பெற்றுக்கொண்டு விருது வழங்கும் மோசடி வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள்ளும் நுழைந்து விட்டது'' என்றார்.