கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை காவல்நிலையத்துக்கு உட்பட்ட பில்லூர் சோதனைச்சாவடியில் காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இரண்டு நபர்களை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுப்பட்டனர்.
அச்சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் உள்ள டேங்க் கவரில் இரண்டு கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்தனர். பின்னர் கஞ்சா கடத்தி வந்த இரண்டு நபர்கள் மற்றும் இரண்டு கிலோ கஞ்சா மற்றும் அவர்களது வாகனத்தை பறிமுதல் செய்து, மங்கலம்பேட்டை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். அவ்விசாரணையில் கஞ்சா கடத்தி வந்தவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள செல்லங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் மஞ்சுநாத் மற்றும் மங்கலம்பேட்டையை சேர்ந்த முகமது அலி மகன் இம்ரான் அலி என்பது தெரியவந்தது.
பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில் இரண்டு நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சிறப்பாக செயல்பட்ட மங்கலம்பேட்டை காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுகள் தெரிவித்தார்.