Skip to main content

தலித் பெண் ஊராட்சி மன்றத் தலைவரை தரையில் உட்காரவைத்த சம்பவம்; மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை!

Published on 10/10/2020 | Edited on 10/10/2020

 

The incident in which a Dalit woman panchayat president was seated on the floor; District Collector in person investigation!


கடலூர் மாவட்டம் புவனகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் தலைவராக, ராஜேஸ்வரி சரவணகுமார் கடந்த உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்டார். இவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்.

 

இந்த நிலையில் துணைத் தலைவராக உள்ள மாற்று சமூகத்தைச் சார்ந்த மோகன்ராஜான் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி மற்றும் அதே சமூகத்தில் உள்ள வார்டு உறுப்பினர் சுகந்தி ஆகிய இருவரையும், ஊராட்சி கூட்டங்களில் தரையில் அமர வேண்டும் எனவும், தேசியக்கொடி ஏற்றக் கூடாது எனவும் உத்தரவிட்டு ஊராட்சி நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தள்ளார். மேலும் ஊராட்சி தலைவரை எந்தப் பணியும் செய்யவிடமால் தடுத்து அவமானப்படுத்தியுள்ளனர். இதற்கு ஊராட்சி செயலாளர் சிந்துஜா துணையாக இருந்துள்ளார்.  

 

இதனால் மனமுடைந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சரவணக்குமார், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கூட்டத்திற்கு மனைவியுடன் சென்றுள்ளார். அப்போது இவர் வெளியே நிற்கும்போது, இவரது மனைவியான ஊராட்சி தலைவர் மற்றும் தலித் வார்டு உறுப்பினரை தரையில் அமரவைத்து கூட்டத்தை நடத்தியுள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியுற்ற அவர், கையில் வைத்திருந்த செல்ஃபோன் மூலம், அவர் கீழே உட்கார்ந்திருந்ததை படம் எடுத்துள்ளார். மேலும் இந்தப் படம் வேறு இடத்தில் எடுத்தது என்று யாரும் சொல்லிவிடகூடாது என்று கூகுள் லொக்கேசன் வைத்துப் படத்தை எடுத்துள்ளார்.

 

பின்னர் இது வெளியே தெரிந்தால் ஊரின் ஒற்றுமை குலைந்துவிடும் என்றும் என்றாவது ஒரு நாள் மாறிவிடுவார்கள் என்றும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஊராட்சி செயலாளரும் மாற்று சமூகம் என்பதால் மாற்று சமூகத்தைச் சார்ந்த வார்டு உறுப்பினர்கள் அதிகமாக உள்ளதால், அவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு கூட்டத்தை நான் சொல்லும்போதுதான் கூட்ட வேண்டும் என மிரட்டியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த ஊராட்சி தலைவரின் கணவர் அப்போது எடுத்த படத்தை வெளியிட்டார்.

 

இதுகுறித்த செய்தி வெளியானதின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு, அம்மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி, கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கார, சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிதுறை அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் என மாவட்ட நிர்வாகமே தெற்குதிட்டை கிராமத்தில் குவிந்தது.


இதனைத் தொடர்ந்து தெற்கு திட்டை ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர், ஊராட்சியில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் தலைவரிடம் பூட்டிய அறையில் விசாரணை மேற்கொண்டார். இதுபோன்ற சம்பவம் மறுபடியும் நடந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி உறுப்பினர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

 

மேலும் அவர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “சம்பவம் குறித்து நேரடியாக விசாரணை மேற்கொண்டோம். இதற்கான விசாரணை வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை என்ற மூன்று விதமாக நடைபெற்றுவருகிறது. தற்போது சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீது வழக்குப் பதிவு செய்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி துணைத்தலைவர் தலைமறைவாகியுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரைப் பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அவருக்கு நோட்டீஸ் கொடுத்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேசியக் கொடி ஏற்றியது குறித்து விரிவான விசாரணை நடைபெறும். மாவட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்” என அவர் கூறினார்.

 

துணைத்தலைவர் மோகன்ராஜன், "அவர்களை உட்காரச் சொல்லுவோம். அவர்கள் உட்கார மாட்டார்கள். தரையில் உட்காருவேன் என்று கூறுவார்கள். தேசியக் கொடியை அவர்கள் ஏற்றமாட்டேன் என்பார்கள் அதனால் நாங்கள் ஏற்றுவோம்" என்கிறார்.

 

Ad

 

இதுகுறித்து புவனகிரி மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சதானந்தம், "சம்பந்தபட்ட ஊராட்சியில், துணைத் தலைவர் இல்லாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் காசோலையைக் கையாள உத்தரவிட வேண்டும். அந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கூறினார்.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், புவனகிரி காவல் நிலையத்திற்கு முன்பு அமர்ந்து சம்பந்தபட்ட துணைத் தலைவரை கைது செய்யவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஊராட்சியில் நடப்பதுபோல் மாவட்டத்தின் பல இடத்திலும் நடைபெறுகிறது. இதற்கு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ரூ.81 கோடியில் அருவாமூக்குத் திட்டத்தைத் தொடங்கி வைத்த வேளாண்துறை அமைச்சர்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Agriculture Minister launched the project for Aruvam at Rs 81 crore

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பரவலாறு வழித்தடத்தில் இருக்கும் 24 கிராம ஊராட்சிகளில் 15 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மழை மற்றும் வெள்ள காலங்களில் அதிக நீர் வரத்தால் பாதிப்பு ஏற்பட்டு வந்தது.  இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்க வைத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி காலத்தில் இதனை நிரந்தரமாக சரி செய்யும் விதமாக அருவாமூக்கு  திட்ட மதிப்பீடு தயார் செய்தது.   ஒவ்வொரு மழைக்காலங்களில் பாதிக்கப்படுவதைக் கருதி தமிழக அரசு பல்வேறு நிதிச் சிக்கலிலும் ரூ.81.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அருவா மூக்கு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டது. இதனை ஒட்டி கடலூர் அருகே திருச்சோபுரம் அருகே திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு பணியைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமைத் தாங்கினார்‌. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொள்ளிடம் வடிநிலைக்கோட்டை நீர்வளத்துறை சிதம்பரம் செயற்பொறியாளர் காந்தரூபன் திட்டத்தை விளக்கி பேசி அனைவரையும் வரவேற்றார். இதில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டும் பணியைத் துவக்கி வைத்தார்.

Agriculture Minister launched the project for Aruvam at Rs 81 crore

பின்னர் பேசிய அவர், “குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் உள்ள பரவலாறு மற்றும் நெய்வேலி என்எல்சி நிறுவனம் சுரங்க நீர் வெளியேற்றப்படுவதால் அதிக வெள்ள நீர் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் உள்ள பகுதி மக்களுக்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆறு மாத காலத்தில் இந்தப் பணிகள் முடிக்கப்படும். அதேபோல் கரிவெட்டி கற்றாழை கிராமத்தில் என்எல்சிக்கு நிலம் கொடுத்த பொது மக்களுக்கும் வாழ்வாதார இழப்பீட்டுத் தொகை தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது. இது பேச்சுவார்த்தை மூலம் கிடைத்த வெற்றி” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள் கொளஞ்சிநாதன் சரவணன் உதவி பொறியாளர்கள் ரமேஷ் கௌதமன் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Next Story

சிறுமியிடம் பாலியல் மிரட்டல்: ஆந்திர மாநில வாலிபர் கைது

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
threat to girl: Andhra state youth arrested

சிதம்பரம் அருகே உள்ள துணிசிரமேடு கிராமத்தைச் சேர்ந்த சிறுமியிடம் ஆன்லைன் மூலம் பழகி செல் போனில் இன்ஸ்டாகிராம் மூலம்  ஆபாசமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய ஆந்திர மாநில வாலிபரை சிதம்பரம் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் துணிசிரமேடு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மல்லானூர் ஊரைச் சேர்ந்த கேசவன் மகன் கிரன் குமார் (21) என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். மேலும் சிறுமியின் அங்கங்கள் குறித்த புகைப்படத்தை அவ்வாலிபர் பெற்றுள்ளார். இந்நிலையில் வாலிபர் கிரண்குமார் செல்போனில் இருக்கும் சிறுமியின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து அச்சிறுமி தாயாரிடம் தெரிவித்ததையடுத்து சிறுமியின் தாயார் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிதம்பரம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் பி.ரகுபதி உத்தரவின் பேரில் கடலூர் மாவட்ட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மல்லானூருக்கு சென்று வாலிபர் கிரண்குமார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து அழைத்து வந்தனர். இதுகுறித்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தினர் வாலிபர் கிரண்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து  நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.