Skip to main content

கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர்; சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுப்பதாக அமைச்சர் உறுதி!

Published on 04/04/2023 | Edited on 04/04/2023


 

minister periyasamy participated for dindigul pandrimalai hospital stone laying function

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் உள்ள ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் பன்றிமலையில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட இருக்கும் நவீன மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டார். அதன் பின் பன்றிமலை கலையரங்கத்தில் நடைபெற்ற நலத்திட்ட விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா, திட்ட இயக்குநர் திலகவதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், ஒன்றிய பெருந்தலைவர் ப.க.சிவகுருசாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டாட்சியர் பிரேம்குமார் வரவேற்று பேசினார்.

 

அதனைத் தொடர்ந்து ஆதரவற்ற பெண்களுக்கு தையல் இயந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், சுய உதவிக் குழு பெண்களுக்கு கடனுதவி மற்றும் பேய்திரைக்காடு பகுதியில் வசிக்கும் 18 ஆதிவாசி குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிவிட்டு பொதுமக்கள் மத்தியில்  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, "கடந்த 12 வருடங்களுக்கு முன்பு மணலூர் மற்றும் ஆடலூர் மலை கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு இலவச கலர் டிவி மற்றும் எரிவாயு அடுப்பு வழங்கிய பின்பு மலை கிராம மக்கள் தங்களுக்கு மருத்துவ வசதி வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். அதன் பின்னர் வந்த அதிமுக அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் மருத்துவ வசதி செய்து கொடுக்கப்படவில்லை.

 

ஏழை எளிய மக்களின் நலன் காக்கும் அரசாக செயல்படும் திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை விடுத்த உடன் உடனடியாக பன்றிமலை மற்றும் ஆடலூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களும் மலைவாழ் மக்களும் பயன்பெறும் வகையில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன மருத்துவமனை வசதி செய்து கொடுத்துள்ளார். இப்பகுதி மக்கள் தங்களுக்கு திருமண மண்டபம் வசதி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். உடனடியாக அவர்களுக்கு திருமண மண்டப வசதி செய்து கொடுக்கப்படும். இது தவிர எனது சொந்த செலவில் உயர் சிகிச்சைக்காகவும், முதலுதவிக்காகவும் மலை கிராம மக்களை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுப்பேன்" என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து'- நீதிமன்றம் தீர்ப்பு  

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
'Cancellation of the order releasing Minister I. Periyasamy'-Court verdict

வீட்டுவசதி துறையில் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்படுவதாக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி அதிகாரத்தை பயன்படுத்தி அன்றைய முதல்வர் கலைஞரின் பாதுகாவலர் ஒருவருக்கு வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐ.பெரியசாமி தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

இந்த வழக்கினுடைய விசாரணை கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில்  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அந்த தீர்ப்பில், 'சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமியை  விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் வழக்கு சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். முறையாக ஒப்புதல் பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்' என உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

மேலும், மார்ச் 28ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய் பிணை செலுத்த வேண்டும் எனவும் ஐ.பெரியசாமிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்த விசாரணையை சிறப்பு நீதிமன்றம் 2024 ஜூலை மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Next Story

'இந்தியாவிற்கே குரல் கொடுப்பவர் கனிமொழி'-தூத்துக்குடி நலத்திட்ட விழாவில் முதல்வர் பேச்சு 

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
'Kanimozhi is a voice for India' - Chief Minister's speech at the Tuticorin welfare function

பெருவெள்ளம் மற்றும் அதி கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் சூசை பாண்டிபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன்,அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,''நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு மாவட்டம் தோறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் கூட்டங்களில் பங்கெடுத்து லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நான் வழங்கிக் கொண்டு வருகிறேன். 2024 ஆம் ஆண்டின் முதல் நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடிய நிகழ்ச்சியை தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலியில் இருந்து தொடங்குவதில் நான் மகிழ்ந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதில் இன்னும் சிறப்பு என்னவென்றால் இது என்னுடைய அருமை தங்கை கனிமொழி அவர்களை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மாவட்டம்.

நாடாளுமன்றத்தில் கர்ஜனை மொழியாக செயல்பட்டு தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பவர் அவர். அதுமட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்காகவும் குரல் கொடுப்பவர் அவர். தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பு என தெரிந்ததும் உடனே இங்கே ஓடோடி வந்து மக்களை காப்பாற்றியதை பார்த்தோம். தங்கை கனிமொழி மாதிரியே தூத்துக்குடி மாவட்டத்தின் பெண் சிங்கமாக விளங்கும் கீதா ஜீவன் அவர்களும், அமைச்சராகவும் செயல்வீரராகவும் இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணனும் மக்களுடன் மக்களாக இருந்து மக்களை காப்பாற்றினார்கள்.

ரூபாய் 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் போர்க்கால அடிப்படையில் 288 நீர்நிலைகளில் ஏற்பட்ட உடைப்புகளை சரி செய்தோம். 145.58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடைப்புகளை நிரந்தரமாக சரி செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் தொழிற்சாலையில் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின்சார கார் தொழிற்சாலை அமைகின்றது. கொரோனாவாக இருந்தாலும், வரலாறு காணாத புயல் வெள்ளமாக இருந்தாலும் மக்கள் வாழ்வாதாரத்திற்காக திட்டங்கள் தீட்டுவது திமுக அரசு தான்'' என்றார்.