திருவள்ளுர் மாவட்டம் திருத்தணியில் நீதிமன்ற வளாகம் அருகே உள்ள உணவு விடுதியில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் அருகே உள்ள பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த மகேஷ் என்ற இளைஞர்தான் இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர். சாலையில் சென்று கொண்டிருந்த மகேஷை அந்த கும்பல் பட்டாக்கத்தியுடன் துரத்த, உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடிய மகேஷ் மக்கள் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் அருகிலிருந்த உணவகம் ஒன்றில் புகுந்துள்ளார். அங்கும் நுழைந்த நான்கு பேர் கொண்ட கும்பல் மகேஷை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியது. அந்த உணவகத்தில் உணவு அருந்தி கொண்டிருந்தவர்கள் இதனைக்கண்டு அச்சத்தில் தலைதெறிக்க ஓட்டம் பிடிக்க, சிலர் என்ன செய்வதென்றே தெரியாமல் அச்சத்தில் உறைந்து போயினர்.
சில நிமிடப்பொழுதில் மகேஷை வெட்டி வீழ்த்திய அந்த கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட உயிருக்கு போராடி கொண்டிருந்த மகேஷை அங்கிருந்தோர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் தலை மட்டும் கையில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டு அதிக ரத்தம் வெளியேறியதால் மகேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்.
இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கைப்பந்து விளையாட்டில் விளையாட அனுமதிக்கவில்லை என்பதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மகேஷ் கொல்லப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. ஒரு ஆண்டுக்கு முன்பு திருவள்ளூர் பெருமாள்பட்டு பகுதியில் கைப்பந்து போட்டி நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் ஏற்பட்டது இந்த விரோதம்.
இதில் மகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேருக்கும், பலவழக்குகளில் தேடப்பட்ட அதே பகுதியை சேர்ந்த விமல், சென்னையை சேர்ந்த லாலு ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டது. விமல், லாலு மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ள நிலையில் இந்த மோதல் நாளடைவில் வலுக்க மகேஷின் நண்பர் விக்கியை கொலை செய்தனர். பால் தினகரன் கையை வெட்டினர். இப்படி மகேஷின் நண்பர்களை கட்டம் கட்ட தொடங்கியதை அறிந்த மகேஷ் விமலை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளார்.
ஆனால் மகேஷின் கொலை முயற்சியிலிருந்து தப்பித்த விமல் அதற்கு பழிதீர்ப்பதற்காக அவனது நண்பர்களுடன் சேர்ந்து மகேஷை வெட்டி கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் மகேஷை வெட்டி கொலை செய்த விமல் குமார், அஜித் குமார், ராஜ்குமார், கோபி ராஜ் ஆகிய 4 பேர் திருத்தணி துணை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கம் போல் கைதான நால்வரின் புகைப்படமும் கை உடைக்கப்பட்ட நிலையில் மாவுக்கட்டுடன் வெளியானது.