திண்டுக்கல் அருகே 300 கிலோ கஞ்சாவுடன் 7 பேரை போலீஸார் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
திண்டுக்கல் தேனி மாவட்டங்களில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கம்பம், மெட்டு, வருஷநாடு உள்ளிட்ட வனப்பகுதிகளில் கஞ்சா பயிரிட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனர். மேலும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி கேரளாவுக்கு அனுப்பி வருகின்றனர்.
இதனைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். டி.ஐ.ஜி. முத்துச்சாமி உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கம்பம் வீரபாண்டி பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 300 கிலோ கஞ்சாவுடன், கும்பல் பிடிபட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் கும்பலாக இயங்கி பல்வேறு பகுதிகளிலிருந்து கஞ்சா கடத்தி, வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவி பிரியா அறிவுறுத்தலின் பேரில், தனிப்படை போலீசார் மாவட்ட எல்லைகளில் சோதனையில் ஈடுபட்டனர். திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலையில் வடமதுரை அருகே தங்கட்டி சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் 200 கிலோ கஞ்சா விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது.
மேலும், திண்டுக்கல் சீலப்பாடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 100 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. சரக்கு வாகனம் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக திண்டுக்கலைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, சோண முத்து, பரணி, ஜெய்சங்கர், ராகவன், யுவராஜ், மற்றும் பாடியூர் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆண்டியப்பன் ஆகியோரை கைது செய்து வடமதுரை போலீசில் ஒப்படைத்தனர்.
கஞ்சா எங்கிருந்து வாங்கப்பட்டது, விற்பனைக்காக எங்கு கொண்டு சென்றனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.