இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பொதிகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான கேசவமூர்த்தி. இராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தோல் தொழிற்சாலையில் உற்பத்தி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவருக்கு, திருவலம் பகுதியில் உள்ள சர்வமங்கள பீடத்தின் என்ற பீடம் ஒன்றை உருவாக்கி நிர்வகித்து வரும் சாந்தகுமார் என்ற சாந்தா சாமிகள் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சாமியார் - பக்தன் என்கிற பழக்கம் நாளடைவில் நெருக்கமான நட்பாக மாறி பணம் கொடுக்கல்-வாங்கல் வைத்துக் கொள்ளும் அளவிற்கு நெருக்கமாகியுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு சாமியார், தான் பெங்களூரில் உள்ள முக்கிய புள்ளி கமலகாரர் ரெட்டி என்பவருடன் இணைந்து தொழில் செய்து வருவதாகவும் அதன் மூலம் மாதம் லட்சக்கணக்கில் வருவாய் வருவதாகவும் நீங்களும் அதில் முதலீடு செய்யும் பட்சத்தில் 10 லட்ச ரூபாய் கொடுத்தால் 3 மாதத்தில் அதை 5 கோடியாக மாற்றி திருப்பி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய கேசவமூர்த்தி, 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையில் தன்னுடைய பணம் மட்டும் இல்லாமல் பலரிடமிருந்து பணத்தை பெற்று சுமார் 45 லட்சம் ரூபாயை சாந்தா சாமியாரிடம் கொடுத்துள்ளார். சுமார் 4 வருடங்களாக எந்த பணத்தையும் திருப்பி அளிக்காத நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை கேசவமூர்த்தியிடம் ஆற்காடு பகுதியில் வசித்துவரும் அரசு பள்ளி ஆசிரியரான புனிதவல்லி என்பவர் மூலமாக சாந்தா சாமி வழங்கியுள்ளார். ஆனால் அந்த காசோலை வங்கியில் பணம் இல்லாததால் திரும்பி வந்தது.
இது சம்பந்தமாக சாந்தா சாமியிடம் கேட்டபோது உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் அதை மீறி செயல்பட்டால் சூனியம் வைத்துவிடுவேன் என மிரட்டுகிறார், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேசவமூர்த்தி, இராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதேபோல் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர், சாமியார் தன்னிடம் 10 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக ஒரு புகார் தந்தார். மேலும் ஆற்காடு நகரை சேர்ந்த பென்ஸ் பாண்டியன் என்பவரும், தன்னிடம் 10 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பூரணி தலைமையிலான போலீசார் புகார் குறித்து விசாரணை மேற்கொண்டனர். நவம்பர் 7ஆம் தேதி வேலூர் மாவட்டம் திருவலம் பகுதியிலுள்ள சர்வமங்கள பீடத்தில் இருந்து விசாரணைக்காக அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பெங்களூரு பகுதியை சேர்ந்த முக்கிய புள்ளியான கமலகாரர் ரெட்டி, சாந்தா சுவாமியிடம் இரிடியம் என்கின்ற ரைஸ் புல்லிங் இருப்பதாகவும் தாங்கள் இதற்கான பணத்தை தயார் செய்து தரும் பட்சத்தில் இருடியத்தை சாமியாரிடம் ரெட்டி தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும் பல லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு ரெட்டி தன்னை ஏமாற்றி விட்டதாகவும் சாந்தா சாமியார் ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து வாலாஜா காவல்நிலையத்தில் 420,506(1),406 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
வாலாஜாபேட்டையில் உள்ள நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரண்டில் நீதிபதி தீனதயாளன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி, அவரை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அரக்கோணத்தில் உள்ள சிறையில் சாமியார் அடைக்கப்பட்டார். சாமியாருக்கு உடந்தையாக இருந்த கமலகாரர் ரெட்டி மற்றும் அரசு பள்ளி ஆசிரியர் புனிதவல்லி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
இந்த சாமியார் பெண்களை விட இளைஞர்கள் மீது மோகம் கொண்டு அவர்களை தன்னுடைய ஆசைக்கு பயன்படுத்தியுள்ளார் என்கிற குற்றச்சாட்டும் எழுந்தள்ளது.