
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார். இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவும் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவுத் தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டார். இதனைத் தொடந்து இந்த விவகாரம் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் உதயநிதியின் சனாதன கருத்து குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின.
தி.மு.க. சார்பில் அமித் மால்வியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல், ஜெகன்நாதன் என்பவர் அமைச்சர் உதயநிதியின் பேச்சு குறித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையை தொடங்கிய போது, நீதிபதிகள் சனாதன எதிர்ப்பு பேச்சு தொடர்பாக மனுதாரர் உயர்நீதிமன்றத்தைத்தான் நாடவேண்டும், உச்சநீதிமன்றத்திற்கு வரக்கூடாது என்று தெரிவித்தனர். ஆனால் மனுதாரரின் தொடர் வாதத்தின் காரணமாக, வழக்கை ஆராய்ந்த நீதிபதிகள், முதற்கட்டமாக நோட்டீஸ் மட்டும் அனுப்புகிறோம், நீங்கள் இந்தியாவில் உள்ள எந்த உயர்நீதிமன்றத்தை வேண்டுமானாலும் நாடலாம் என்று அறிவுறுத்தினார்.
மேலும், இந்த மனு தொடர்பாக அமைச்சர் உதயநிதி பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சனாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது பற்றி தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “உச்சநீதிமன்ற நோட்டீஸை சட்டப்படி எதிர்கொள்வேன்” என்று தெரிவித்தார்.