இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘அந்நியன்’. நடிகர் விக்ரம் நடிக்க, ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில், பல வருடங்கள் கழித்து ‘அந்நியன்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாகவும், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும், பென் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் நேற்று (14.04.2021) இயக்குநர் ஷங்கர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ‘அந்நியன்’ படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ''‘அந்நியன்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இயக்குநர் ஷங்கர் முறையான அனுமதி பெறவில்லை. ‘அந்நியன்’ படத்திற்காக சுஜாதா எழுதிய கதையை நான் பணம் கொடுத்து நான் வாங்கி வைத்துள்ளேன். கதை உரிமம் என்னிடம் உள்ள நிலையில், எனது அனுமதியின்றி ‘அந்நியன்’ படத்தை ரீமேக் செய்வது சட்டவிரோதம்'' என கூறப்பட்டுள்ளது. அதேபோல் ‘அந்நியன்’ திரைப்படத்தை இந்தியில் தயாரிக்கும் பென் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனத்திற்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, ‘அந்நியன்’ இந்தி அறிவிப்பு காரணமாக, “‘இந்தியன் 2’ படத்திற்குப் பல கோடிகள் செலவு செய்துள்ளதால், ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் பிற படங்களை ஷங்கர் இயக்கக்கூடாது. இதை முடிக்காமல் அவர் வேறு படத்தை இயக்க தடை விதிக்க வேண்டும்” என எதிர்ப்பு தெரிவித்துள்ள லைகா படத்தயாரிப்பு நிறுவனம், இன்று நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.