Skip to main content

“சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Published on 15/07/2023 | Edited on 15/07/2023

 

Honorary Doctorate to Sankaraiah Chief Minister M.K. Stalin announcement

 

தகைசால் தமிழர் சங்கரய்யாவுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

சுதந்திரப் போராட்டத் தியாகியும் மிகச் சிறந்த பொதுவுடைமைத் தலைவராகவும் திகழும் மரியாதைக்குரிய சங்கரய்யா அவர்களுக்கு தமிழ்நாடு அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு "தகைசால் தமிழர்" என்ற விருதினை வழங்கி கௌரவித்தது. மேலும் ஏழை எளிய மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்தவரும் தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவரும் ஒரு மிகச் சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியுமான திரு சங்கரய்யா அவர்களுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

 

இந்நிலையில் சங்கரய்யாவுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆவன செய்யப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று 102வது பிறந்த நாள் காணும் சங்கரய்யா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்ற பொழுது ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் காரணமாக அவர் கல்லூரித் தேர்வினை எழுத முடியவில்லை. இந்தியா விடுதலை பெறுவதற்கு 12 மணி நேரங்களுக்கு முன்பாகத்தான் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதியன்று அவர் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்