கோயம்பத்தூர் மாவட்டம், கன்னார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருண். இவர் கோவை காரமடை பகுதியில் புதியதாக ஒரு உணவகத்தை திறக்க திட்டமிட்டு, அதற்கான பணிகளை செய்து முடித்து இன்று(14ம் தேதி) திறப்பு விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தார். திறப்புவிழாவுக்கான ஏற்பாடுகளை நேற்று இரவு அருண், தனது கடையில் கவனித்து வந்தார். மேலும், தனது உணவகத்திற்கு பெரியார் உணவகம் என பெயர் வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று (13ம் தேதி) இரவு, திடீரென அருண் கடையினுள் புகுந்த ஒரு கும்பல் தாங்கள் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் என கூறி கோயம்புத்தூரில் பெரியார் பெயரில் உணவகமா என சொல்லி கடையை அடித்து நொறுக்கி உடைத்துள்ளனர். மேலும், அருணைத் தாக்கிய அந்தக் கும்பல், ‘கோயம்புத்தூர் இந்து அமைப்பின் கோட்டை’ என்று சொல்லியும் மிரட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அருண், கன்னார்பாளையம் காவல்துறையில் இதுகுறித்து புகார் செய்தார். அந்தப் புகாரை ஏற்ற கன்னார்பாளையம் காவல்துறையினர் அருண் கடையில் தகராறு செய்து அடித்து நொறுக்கிய இந்து அமைப்பைச் சேர்ந்த ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
பெரியார் சிலைகளை அவ்வப்பொழுது அவமதிப்பு செய்து வரப்பட்ட நிலையில், தற்போது பெரியார் பெயரை வைத்த ஒரு உணவகத்தையே அடித்து நொறுக்கி மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.