Skip to main content

அரசு பள்ளி ஆசிரியர்களில் இருந்து தொடங்கியது இந்தி திணிப்பு

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

 

பள்ளி குழந்தைகளுக்கு இந்தி கட்டாயம் என்று கல்விக் கொள்கையில் கொண்டு வந்த போது தமிழகம் கொந்தளித்தது. இந்தி கட்டாயம் இல்லை. விருப்ப பாடம் தான் என்று பின்வாங்கினார்கள். அடுத்து ரயில் நிலையங்களில் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே அதிகாரிகள் பேச வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதற்கும் போராட்டக்குரல் எழுந்த போது அதையும் திரும்ப பெற்றனர். சில நாட்களுக்கு முன்பு தபால்துறை தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மற்றும் கேள்விகள் கேட்கப்பட்டதால் தமிழக சட்டமன்றத்திலும் டெல்லியில் பாராளுமன்றத்திலும் தமிழ் குரல்கள் ஓங்கி ஒலித்தது. அது தவறு தான் என்று மத்திய அரசு ஒத்துக் கொண்டது. இந்தி திணிப்பு என்று தொடங்கியது முதலே பாராளுமன்றத்தில் தினசரி தமிழ் குரல்கள் தமிழக தலைவர்களின் பெயர்கள், பாடல்கள், பொன்மொழிகள் கேட்கத் தொடங்கிவிட்டது.

 

biometric



இந்த நிலையில் தான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் எதிர்ப்புகள் கிளம்பினாலும் தற்போது பயோமெட்ரிக் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
 

அந்த இயந்திரங்களை வாங்கிப் பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். முழுமையாக இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு அரசு வழங்கும் பயோமெட்ரிக் இயந்திரத்தில் இந்திய அரசு எம்பளம் இந்தி, ஆங்கிலம் மொழி. 


 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 112 உயர்நிலைப் பள்ளிகளுக்கும் 106 மேல்நிலைப் பள்ளிகளுக்கும் 310 நடுநிலைப் பள்ளிகளுக்கும் பயோமெட்ரிக் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து இயந்திரத்திலும் இந்தியும், ஆங்கிலமும் மட்டுமே உள்ளது. இதைப் பார்த்த ஆசிரியர்கள்.. முதலில் மாணவர்களிடம் இருந்து இந்தியை புகுத்த நினைத்தார்கள். அதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தற்போது ஆசிரியர்களிடம் இருந்து புகுத்தி வருகிறார்கள். எப்படியே ஒரு வகையில் இந்தியை எதிர்க்கம் தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற இந்திய அரசின் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசும் துணை போவது வேதனை அளிக்கிறது என்றனர்.
 

3 வயது குழந்தை எப்படி மும் மொழிகளை படிக்க முடியும் என்று நடிகர் சூர்யா சொன்னதற்கு சுற்றி வளைத்து அவரை திட்டிய பா.ஜ.க வினரும் தமிழக அமைச்சர்களும் தற்போது ஆசிரியர்களிடம் இந்தியை திணிக்க நினைப்பதை எப்படி சொல்லி சமாளிக்கப் போகிறார்களோ.


 

இதே போல கடந்த 4 வருடங்களுக்கு மேலாக ஆசிரியர்கள், மாணவர்கள் என் அனைவருக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவை செயல்படுத்தி வரும் ஒரு அரசுப் பள்ளியில் இது பற்றி கேட்டால்.. ஆங்கிலத்தில் இயந்திரம் இருந்தது. சாப்ட்வேர் மூலம் தமிழில் மாற்றிக் கொள்ள வசதி இருந்தது என்கிறார்கள். ஆனால் தற்போது அரசு கொடுத்துள்ள இயந்திரத்தில் மொழி மாற்றும் வசதி குறைவாக உள்ளது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
 

இந்தியா இந்தியை விடாமல் புகுத்துவோம் என்கிறது.. தமிழ்நாடு இந்தியை திணிக்கவிடமாட்டோம் என்கிறது. பயோமெட்ரிக் இயந்திரத்திற்காகவும் எதிர்கட்சிகள் போராட்டம் தொடங்கினால் எதிர்ப்புகள் கிளம்பினால் தமிழுக்கு மாற்றப்படலாம். எல்லாம் போராடித் தான் பெற வேண்டும்.

                
    

சார்ந்த செய்திகள்