Skip to main content

ஒருங்கிணைந்த மகப்பேறு தீவிர சிகிச்சை மையம் தொடக்கம்... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்!

Published on 01/10/2021 | Edited on 01/10/2021

 

Launch of Integrated Maternity Intensive Care Center; Chief Minister MK Stalin opened!

 

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 12 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மகப்பேறு தீவிர சிகிச்சை மற்றும் சிசு  பராமரிப்பு மையத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (30.09.2021) திறந்துவைத்தார்.

 

சேலம், தர்மபுரி மாவட்டங்களில் பல்வேறு அரசு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை (செப். 29) சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தார். சேலம் மாவட்டம் வாழப்பாடி, ஆத்தூர், கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த அரசு நலத்திட்ட விழாக்களில் கலந்துகொண்டார். மரவள்ளி விவசாயிகள், சேகோ உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார்.

 

இரண்டாம் நாளாக வியாழக்கிழமை (செப். 30) அவர் தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், 12 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மகப்பேறு தீவிர சிகிச்சை மற்றும் சிசு பராமரிப்பு மையத்தை முதலமைச்சர் திறந்துவைத்தார்.

 

ஆரம்பத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக இருந்த இம்மருத்துவமனை, 2008ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது எம்பிபிஎஸ் படிப்பில் 100 மாணவர்கள் சேர்க்கப்பட்டுவருகின்றனர்.

 

தர்மபுரி மட்டுமின்றி கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகளும் இங்கு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இம்மருத்துவமனையில் தினமும் 30 முதல் 50 பிரசவங்கள் நடக்கின்றன. இதையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின், 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு விருது மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு குழந்தை நல பெட்டகத்தை முதல்வர் வழங்கினார். 

Launch of Integrated Maternity Intensive Care Center; Chief Minister MK Stalin opened!

 

புதிய மகப்பேறு கட்டடத்தை திறந்துவைத்த முதல்வர், ஒவ்வொரு அறையாகச் சென்று பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவள்ளி, எம்எல்ஏ ஜி.கே. மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்களிடம் முதல்வர் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். ஒகேனக்கல் செல்லும் வழியில் சாலையோரங்களில் மக்கள் நின்று அவரைப் பார்த்து உற்சாகமாக கையசைத்து வரவேற்பு அளித்தனர். கார் ஓட்டுநரிடம் மெதுவாகச் செல்லும்படி கூறிய முதல்வர், சாலையோர மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டதோடு, அவர்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

 

இதையடுத்து முதல்வர், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் நீரேற்று அறையை நேரில் பார்வையிட்டார். ஒகேனக்கல்லில் இருந்து தர்மபுரி செல்லும் வழியில் பென்னாகரம் அருகே போடூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

 

விடுதி அறைகள், சமையல் கூடத்தைப் பார்வையிட்டதுடன், மாணவர்களைச் சந்தித்து விடுதியில் உள்ள வசதிகள், குறைகளைக் கேட்டறிந்தார். சாப்பாடு தரமாக உள்ளதா எனக் கேட்டறிந்த அவர், மாணவர்களிடம் நன்றாகப் படிக்கும்படி அறிவுரை வழங்கினார். 

 

இதைத் தொடர்ந்து அவர், வத்தல்மலையில் வசிக்கும் பழங்குடியின மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் மாலை 05.30 மணியளவில் காமலாபுரம் விமான நிலையம் சென்று, அங்கிருந்து அவர் மாலை 06.00 மணியளவில் விமானம் மூலம் சென்னைக்குக் கிளம்பிச் சென்றார்.                 

 

 

சார்ந்த செய்திகள்