தேர்தல் வாக்குறுதியின்படி இந்த ஆண்டு எத்தனை டாஸ்மாக் கடைகளை மூட உள்ளீர்கள்? மூடப்பட்ட கடைகளை மீண்டும் திறப்பதற்கு காட்டும் அக்கறையை இளைஞர்களை கெடுக்கும் டாஸ்மாக் கடைகளை மூடுவதில் ஏன் காட்டவில்லை? என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
சென்னை, திருமுல்லைவாயலில் மதுபான கடைகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 25 பேரின் ஜாமீன் மனுக்கள் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை உள்ளது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வக்கீலைப் பார்த்து, தமிழகத்தில்தான் மது அருந்துவோர் அதிகம் உள்ளனர். ஒரு தலைமுறை ஏற்கனவே மதுவுக்கு அடிமையாகி வீணாகிவிட்டது.
இந்த தலைமுறையையாவது காப்பாற்ற வேண்டும். இது நீதிமன்றத்தின் கடமையாகும். இளைஞர்கள் மதுப்பழக்கத்திற்கு அதிகம் அடிமையாகி வருகிறார்கள். மது அருந்துபவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பல குற்றங்கள் டாஸ்மாக் பார்களிலிருந்தே தொடங்குகின்றன. இந்த பார்களை ஏன் மூடக்கூடாது? இந்த பார்கள் உணவு பாதுகாப்பு சட்டப்படி உரிய அனுமதியுடன்தான் நடைபெறுகிறதா? அதிமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி கடந்த 2016ல் 500 டாஸ்மாக் கடைகளை மூடியது. கடந்த ஆண்டு 500 கடைகள் மூடப்பட்டன.
இந்த ஆண்டு எத்தனை கடைகளை மூட உள்ளீர்கள்?. மூடப்பட்ட கடைகளை மீண்டும் திறப்பதற்கு காட்டும் அக்கறையை இளைஞர்களை கெடுக்கும் டாஸ்மாக் கடைகளை மூடுவதில் ஏன் காட்டவில்லை?. நடப்பாண்டில் 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அரசு கடைகளை மூட என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இந்த கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமை (6ம் தேதி) பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 6ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.