
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் கோவையில் பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்ததால் முக்கிய பகுதிகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மாநகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்தது. காந்திபுரம், உக்கடம், டவுன் ஹால், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிந்தது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் நீர் தேங்கியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
குறிப்பாக அரசு மருத்துவமனை உள்ள பகுதியில் அதிகளவு மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மழை நீரோடு கழிவுநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் அவதி அடைந்தனர். மழை முழுமையாக நின்ற பிறகு மழை நீருடன் கலந்து வெளியேறும் கழிவு நீர் வெளியேற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.