Skip to main content

கொட்டித் தீர்க்கும் கனமழை; முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு

Published on 17/12/2023 | Edited on 17/12/2023
The heavy rain Chief Minister M. K. Stalin's action order

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழைக்கும், மிக கனமழைக்கும் வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தற்போது கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர்.

அதே சமயம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாகத் தென் மாவட்டங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் அணைகளில் இருந்து அதிக அளவில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தென் மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வருவதை ஒட்டி தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டத்தை மேற்கொள்ளத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அறிவித்தபடி, தாமிரபரணி ஆற்றிலிருந்து கடலில் உபரியாக கலக்கும் 13,758 மில்லியன் கன அடி வெள்ளநீரில், கன்னடியன் (தாமிரபரணியின் 3-வது) அணைக்கட்டில் இருந்து 2765 மில்லியன் கன அடி நீரை கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டத்தை நான்கு நிலைகளாக செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு, அன்றைய முதலமைச்சர் கலைஞரால் கடந்த 21.02.2009 அன்று இத்திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளில் இப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

தற்போது, முதல் மூன்று நிலைகளுக்கான பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டு நான்காவது நிலைப்பணிகளும் முடியும் தறுவாயில் திருநெல்வேலி மாவட்டத்தில் 67.1 கி.மீ நீளத்திற்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 8.10 கி.மீ நீளத்திற்கும், ஆக மொத்தம் 75.2 கி.மீட்டர் நீளத்திற்கு வெள்ளநீர்க் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தினால் 17,002 ஹெக்டேர் புதிய பாசனப் பரப்பு உட்பட 23,040 ஹெக்டேர் நிலங்கள் (56933 ஏக்கர்) பாசன வசதி பெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளும் பயன்பெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் 32 கிராமங்கள், 177 குளங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்கள், 75 குளங்களும் பயன்பெறும்.

The heavy rain Chief Minister M. K. Stalin's action order

தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இத்திட்டத்தில் உபரிநீரைக் கொண்டு செல்வது குறித்து,  நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகனிடமும், நீர்வளத்துறை அலுவலர்களுடனும்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்தாலோசித்தார். இந்த ஆலோசனையின்போது எடுக்கப்பட்ட முடிவின்படி, கன்னடியன் வெள்ளப்பெருக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

“தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” - தமிழக முதல்வர் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Tamil Nadu Chief Minister's ordered Drinking water should be distributed without interruption

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், அதிகரிக்கும் வெப்பத்தை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்ககளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27-04-24) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் பேசியதாவது, “கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேற்கு மாவட்டங்களில் மழை குறைவால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை அதிகாரிகள் விளக்கினர். அணைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் தேவை என்பதால் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டு மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியை மாவட்டங்கள் பகிர்ந்து குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் செயல்பட தடையற்ற மின்சாரம் அவசியம் வழங்க வேண்டும். திட்டப்பணிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை மின்வாரியத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் குடிநீர் விநியோகம் போன்ற முக்கிய பணிகளில் சுணக்கமின்றி கண்காணிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வறண்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.