சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர். சிறையில் இருந்து வெளியே வர ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் ஆளுநர் மாளிகை முகப்பு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசியதாகப் பிடிபட்ட ரவுடியை விசாரித்ததில் தெரியவந்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடியான கருக்கா வினோத். இவர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதைப் பற்றவைத்து ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீசி இருக்கிறார். அடுத்தடுத்து இரண்டு பாட்டில்களை வீசியதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அங்கு இருந்த பாதுகாப்பு போலீசார் விரைந்து சென்று கருக்கா வினோத்தை பிடித்து கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் கருக்கா வினோத் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஏற்கனவே பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றுள்ளார். ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது மீண்டும் ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்த பெட்ரோல் குண்டு வீச்சுக்கு இதுதான் உண்மை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.