Skip to main content

சொந்த செலவில் அரசுப் பள்ளியைச் சீர் செய்யும் ஆசிரியர்கள்; குவியும் பாராட்டு

Published on 26/12/2022 | Edited on 26/12/2022

 

government school teachers renovated classrooms in own money 

 

கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்தில் உள்ள முருகன் குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 60 பேர் படித்து வந்த நிலையில், தற்போது 225 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.

 

இப்பள்ளியின் மொத்த பரப்பளவு 3000 சதுர அடிக்கும் குறைவாக இருப்பதன் காரணமாகப் பள்ளிக்குக் கூடுதல் கட்டிடம் கட்ட முடியவில்லை. தற்பொழுது ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வகுப்பறை கட்டிடம் உள்ளது. ஏழு மற்றும் எட்டு வகுப்பு மாணவர்களுக்குத் திறந்த வெளியில்தான் பாடம் நடத்தப்படுகிறது. மேலும் 35 ஆண்டுகளாக இந்த பள்ளிக்குக் கழிப்பறை வசதி இல்லாததால் மாணவ மாணவிகள் 200 மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளாற்றங்கரைக்கு செல்ல வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.

 

இப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதம், விளையாட்டு, கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்த வருடம் ஓவியப் போட்டிக்கு மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்பள்ளியின் ஆசிரியர்கள் தனியார்ப் பள்ளிகளை விடக் கூடுதல் கவனம் செலுத்தி மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். இந்த பள்ளியில் படித்தவர்கள் தற்போது சட்டம், வேளாண்மை, ஆசிரியர் பணி, குடிமைப் பணி மற்றும் அரசியல் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.

 

ஆசிரியர்களின் கடுமையான உழைப்பு, முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு, முருகன்குடி தாய் பள்ளி வளர்ச்சி குழு, பள்ளி மேலாண்மை குழு, திருவள்ளுவர் தமிழர் மன்றம், செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம், ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள் என இப்பள்ளியின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கிறார்கள். இந்நிலையில் இரண்டு வகுப்பறை கட்டிடத்தில் தரைத்தளம் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த பகுதிகளை இப்பள்ளியின் ஆசிரியர்கள் தமது ஊதியத்திலிருந்து ஒரு பகுதியினை செலவு செய்து சீரமைத்து உள்ளனர். இந்த பணி என்பது மகத்தானது பாராட்டுக்குரியது என ஊர் மக்கள் அந்த ஆசிரியர்களைப் பாராட்டுகின்றனர். அதே சமயம் பள்ளிக்குத் தேவையான கட்டிட வசதிகளைச் செய்து கொடுக்கவும், கழிவறை வசதிகளைச் செய்து கொடுக்கவும் அரசுக்கு ஊர் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆரணி காங்கிரஸ் எம்.பி. கடலூர் வேட்பாளராக அறிவிப்பு!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Arani Congress MP Cuddalore candidate announcement

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, திட்டக்குடி, மற்றும் நெய்வேலி சட்டமன்ற ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் வருகிற பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இயக்குநர் தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆரணி தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வரும் மருத்துவர் எம்.கே விஷ்ணுபிரசாத் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் செயல் தலைவராக உள்ளார். மேலும் இவர் கடந்த 2006 முதல் 2011 வரை செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1972 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி ஆவார். இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸின் மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் செய்யாறு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் செய்யாறு சிப்காட் தொழில் பூங்காவை நிறுவுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த புறவழிச்சாலை அனுமதி பெற்று ஓச்சேரி பாலத்தை கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆரணி தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவதால் இவர் கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Next Story

தலைமை ஆசிரியரின் கீழ்த்தரமான செயல்! ஆவேசமான பெற்றோர்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
POCSO Case register on government school teacher

ஓமலூர் அருகே, சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்து, சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செம்மண்கூடல் ஊராட்சிக்கு உட்பட்ட, கந்தம்பிச்சனூரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 128 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். வாழப்பாடி அருகே உள்ள சோமம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், சில மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்கள் கிளம்பின. 

இதையறிந்த பெற்றோர்கள் திரண்டு சென்று மார்ச் 11ஆம் தேதி காலை, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை இழுத்து மூடி பூட்டு போட்டு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். திடீரென்று மக்கள் திரண்டு வந்து மறியலில் இறங்கியதால் அந்தப் பகுதியே களேபரமாக மாறியது. இந்நிலையில், தகவல் அறிந்த தாரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஊழியர்களும் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரிடம் பேசினர். 

அப்போது அவர்கள், தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை உடனடியாக பணியிடைநீக்கம் மற்றும் கைது செய்யும்படி ஆவேசமாக கூறினர். மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தகவலை முன்பே அறிந்து இருந்தும் அதை தெரியப்படுத்தாமல் மூடி மறைத்த ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கோரினர். பள்ளியில் அனைத்து வகுப்பு அறைகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தவும் கோரிக்கை விடுத்தனர். 

பெற்றோர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும், நிகழ்விடத்திலேயே தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை பணியிடைநீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் உத்தரவிட்டார். இதையடுத்து பெற்றோர்கள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே, ஓமலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் ராதாகிருஷ்ணன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பள்ளி மீதான இதர புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தால் கே.ஆர்.தோப்பூர் - முத்துநாயக்கன்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.