வடசென்னை அனல்மின் நிலையத்தில் ராட்சத குழாய்களிலிருந்து சுடு நீருடன் சாம்பல் கழிவுகள் வெளியேறுவதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளது. இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதற்தாக எண்ணூர் துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலமாக நிலக்கரி கொண்டு வரப்பட்டு, நிலக்கரி எரிக்கப்பட்டு மின்சார உற்பத்தி நடைபெற்று வருகிறது. நிலக்கரியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது அதிலிருந்து வரும் சாம்பல் கழிவுகள் வெளியேறும். அப்படி வெளியேறும் சாம்பல் கழிவு வடசென்னை அனல்மின் நிலையத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்திலுள்ள செப்பாக்கம் என்ற பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு 1,126 ஏக்கர் பரப்பளவில் உள்ள சாம்பல் குளம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த சாம்பல் குளத்தில் இந்தக் கழிவுகள் குழாய்கள் மூலம் கொண்டு சேர்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது சாம்பல் கழிவுகளை எடுத்துச் செல்லும் அந்த ராட்சத குழாய்களில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக, சுடு நீருடன் சாம்பல் கழிவுகள் வெளியே பீச்சி அடித்தது. இதனால் அந்தப் பகுதியே சாம்பல் கழிவுகளாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.