Skip to main content

கல்வித்துறை அமைச்சரின் மாவட்டத்தில் மதிய உணவுக்காக தவிக்கும் பள்ளி குழந்தைகள்...!

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

அரசு பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலை உணவும் வழங்க திட்டமிட்டுள்ளதாக அ.தி.மு.க. எடப்பாடி அரசு அறிவித்துள்ள நிலையில் "ஏப்பா எங்க குழந்தைகளுக்கு மத்தியானம் வழங்கப்படும் ஒரு வேளை சாப்பாட்டாவது கொடுக்க அந்த சாப்பாட்டை தயாரிக்க சமையல்கார பெண்களை இங்கு அனுப்புங்க, அப்புறமா காலை உணவை பற்றி பேசலாம்" என மலை பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.

 

School children lunch issue

 



ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் பர்கூர் மலைப்பகுதியில் புதியதாக தொடங்கப்பட்ட பல தொடக்கப்பள்ளிகளில் சமையலர் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படாமல் உள்ளதால் ஆசிரியர்களே தற்காலிகமாக சமையலர் நியமித்து அவர்களே ஊதியம் வழங்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. தாளவாடி வட்டாரத்தில் கடந்த 2014 ம் ஆண்டு வைத்தியநாதபுரம், செலுமிதொட்டி, ஜே.ஆர்.எஸ்.புரம், அல்லாபுரம் தொட்டி, சோளகர்தொட்டி, தர்மாபுரம் ஆகிய 6 கிராமங்களில் புதியதாக தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டது.

இந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டது. ஆனால் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் சமையலர்கள் நியமனம் செய்யபடவில்லை. இதையடுத்து அருகே உள்ள பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்கள், இந்த பள்ளிகளில் கூடுதல் பொறுப்பு என நியமிக்கப்பட்டுள்ளதால் சத்துணவு அமைப்பாளர்கள் உணவு சமைப்பதற்கான பொருட்களை வழங்கும் பணி மேற்கொண்டு வரும் நிலையில் புதிய பள்ளிகள் திறக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியும் இதுவரையிலும்  சமையலர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

 



பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக சமையலர் நியமித்து பணிகளை மேற்கொள்ளுமாறு தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் கூறியதால் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பில் தற்காலிகமாக சமையலர் நியமித்து உணவு சமைத்து மாணவர்களுக்கு சத்துணவு வழங்கி வருகின்றனர். ஆனால் பெரும்பாலும் மலைகிராமங்களில் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பில் உள்ளவர்கள் பள்ளிக்கு வழங்கும் ஒத்துழைப்பு மிகவும் குறைவுதான்.

இந்த நிலையில் சமையலருக்கான ஊதியத்தை பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பில் உள்ளவர்கள் வழங்குவதில்லை. இதனால் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களே தங்களது கையிலிருந்து சமையலர்களுக்கு ஊதியம் வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே மேற்கண்ட பள்ளிகளில் சமையலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைகிராம மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. கல்வியில் புரட்சி செய்கிறேன் என கூறும் கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் மாவட்டத்தில் தான் இந்த பரிதாப வேண்டுகோள்.  

 

சார்ந்த செய்திகள்