
காஞ்சிபுரம் மாவட்டம் வேதவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களாகவே பெய்து வரும் தொடர் மழை காரணமாக காஞ்சிபுரத்தின் பல்வேறு இடங்களில் உள்ள நீர் நிலைகளில் நிரம்பியுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தமுள்ள 909 ஏரிகளில் 403 ஏரிகள் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மையப்பகுதியில் செல்லக்கூடிய வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது நீர் திறப்பு 2000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அங்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு அருகில் இருக்கக்கூடிய தாயாரம்மன் குளம், பெரியகுளம், சின்ன தெரு, பெரிய தெரு, மந்தைவெளி, நேரு நகர், வானவில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், தற்பொழுது குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருக்கும் மக்களை அப்புறப்படுத்தி நிவாரண முகாம்களில் தங்க வைக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.