Skip to main content

ஆசை மூட்டுவதே அதிகாரிகள்தான்... டாஸ்மாக் பணியாளர்கள் ஐவர் சஸ்பெண்ட்!

Published on 02/11/2021 | Edited on 02/11/2021

 

Five Tasmac employees suspended

 

விழுப்புரம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது ஜானகிபுரம். இப்பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்ததன் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 32 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. குடோனில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 6 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் ஐயப்பன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

 

இந்த சம்பவத்தின் அடிப்படையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு அதிகாரிகள் மேற்படி டாஸ்மாக் கடைகளில் சோதனை செய்தனர். அதில் 4 லட்சத்து 70 ஆயிரத்து 660 ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களும், இன்னொரு கடையில் இரண்டு லட்சத்து 29 ஆயிரத்து 485 ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களும் இருப்பு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனடிப்படையில் மேற்பார்வையாளர்கள் ஐயப்பன், பார்த்தசாரதி, மற்றும் விற்பனையாளர்கள் சிவகுமார், ராமஜெயம், முருகன் ,ஆகிய 5 பேரையும் சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

 

இதுகுறித்து பல்வேறு டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளில் வேலை செய்யும் விற்பனையாளர்கள் ஊழியர்கள் தரப்பில் நாம் விசாரித்தபோது, ''ஒவ்வொரு விற்பனையாளரும் மதுபாட்டில்களை  கூடுதல் விலை வைத்து விற்பதற்குக் காரணம் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காகத்தான். அதிகாரிகள் லஞ்சம் வாங்காமலிருந்தால் நாங்கள் அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்க வேண்டிய அவசியமே இல்லை. எங்களை இதுபோன்ற சிறுசிறு தவறுகளைச் செய்வதற்குத் தூண்டுவதே அதிகாரிகள் தரப்பில்தான். ஆனால் ஆசை மூட்டுவதே அதிகாரிகள்தான். கடைசியில் பழியை எங்கள் மீது போட்டுவிட்டு அவர்கள் தப்பி விடுகிறார்கள். இதில் நாங்கள் பலிகடா ஆகிறோம்'' என்று ஆதங்கத்துடன் கூறுகிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்