மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனைகட்டிப் போரடித்தார்கள் தமிழர்கள் என்ற வரலாறு உண்டு. ஆனால் சமீப காலமாக போதிய மழை இல்லாமல் போனதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தற்போது சம்பா நெல் அறுவடை தீவிரமாகி உள்ளது. அதேபோல் உளுந்து பயிர் சாகுபடியும் தீவிரமடைந்துள்ளது. மேலும் நெல் அறுவடை செய்ய போதிய அளவில் அறுவடை இயந்திரம் கிடைக்கவில்லை. அதனால் விளைந்த நெல் மணிகள் வயலிலேயே உதிர்ந்து நாசமாகி வருகிறது ஒரு பக்கம். இது சம்பந்தமாக விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் சமீபத்தில் நடத்திய விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் பல்வேறு விவசாயிகள் அதிக அளவில் நெல் அறுவடை இயந்திரம் கொண்டு வர வேண்டும் அப்போதுதான் விளைந்த நெல்லை அறுவடை செய்து விற்க முடியும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இப்படிபட்ட நிலையில் பல விவசாயிகள் விளைந்த நெல்லை உளுந்தை வீட்டுக்குக் கொண்டுவர முடியாமல் ஒருபக்கம் தவிக்கிறார்கள். விவசாயிகள் பலர் இச்சிரமங்களுக்கிடையே விளைந்தநெல்லை உளுந்தை அறுவடை செய்து தமிழ்நாடு அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து சேர்க்கிறார்கள். அங்கேயும் உரிய நேரத்தில் விளை பொருட்களை கொள்முதல் செய்து கொண்டு பணம் தராமல் நாட்கணக்கில் விவசாயிகளை காக்க வைத்து பழைய பொருட்களைப் போல அவர்களை வெயிலில் காயப்போட போடுகிறார் அதிகாரிகள். நாட்கணக்கில் காத்திருக்க வைக்கிறார்கள்.
உதாரணமாக நேற்று திருக்கோவிலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு உள்ளனர். எனவே விளைந்த விவசாயிகளின் விளைபொருட்களை உரிய நேரத்தில் கொள்முதல் செய்து கொண்டு அவர்களுக்கு தர வேண்டிய பணத்தை உடனே கொடுக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் குடும்பம் வாழும். அவர்கள் வாழ்ந்தால்தான் நகரத்திலுள்ள வசதி படைத்தவர்கள் அரசு மற்றும் தனியார் கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் என பல தரப்பினரும் சாப்பிட உணவு கிடைக்கும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு அரசு விரைந்து விவசாயிகளின் விளைந்த பொருட்களை அறுவடை செய்யவும் அதை கொள்முதல் செய்யவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள்.