Skip to main content

'வேளாண்மை' பன்னாட்டு முதலாளிகளின் பொறியில் மாட்டுகிறது; கொந்தளிக்கும் மீத்தேன் எதிர்ப்புக்கூட்டமைப்பு

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

தமிழக வேளாண்மை பன்னாட்டு முதலாளிகளின் பொறியில் மாட்டுகிறது, என ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டத்திற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் கூறுகையில், "காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க முன்வராத தமிழக அரசு, வேளாண் பெருமக்களின் வருமானத்தை உயர்த்தப்போவதாகவும் , ஒப்பந்த சாகுபடியில் பங்குபெறும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கப்போவதாகவும் கூறி, "தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை  ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல்) 2019 -என்ற சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
 

farmers issue


கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி சட்டப்பேரவையில் ஒப்புதல் பெற்ற இச்சட்ட வரைவானது நேற்று அக்டோபர் 29- அன்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ஒப்புதலைப் பெற்று சட்டம் ஆகியுள்ளது.

தமிழக வேளாண்மையை பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டுக்குள் சிக்க வைக்கும் மிக அபாயகரமான இச்சட்டத்தை இந்தியாவிலேயே தமிழக அரசுதான் முதன் முதலில் இயற்றியுள்ளது என்று தமிழக அரசு பெருமை பேசி இருக்கிறது. தமிழக அரசின் புரிதலும் நிலைப்பாடும் அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கிறது.

இச்சட்டப்படி, அதிக விளைச்சல் காரணமாக விவசாயப் பொருட்களின் விலை குறைந்து விவசாயிகள் இழப்புக்கு ஆளாகும் போது ஒப்பந்த நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையைக்கொடுத்துவிடும்; ஆகவே இந்த ஒப்பந்தம் நல்லது என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. ஆனால், அதிக விளைச்சல் ஏற்பட்டு அதனால் இழப்பு என்பது ஏற்படுவதே இல்லை. ஏதோ ஒரு காலத்தில் அப்படி  நிகழ்ந்தாலும், அதற்குத் தீர்வு அரசே கொள்முதல் செய்து, உற்பத்திப் பொருளை தேவையானப் பகுதிக்கு அனுப்பி வைப்பது தான் அதைவிடப் பெரிய வேலை அரசுக்கு வேறு ஒன்றும் இல்லை.

ஆனால் நடப்பு காலமோ முற்றிலும் மாறுபட்டது. இச்சட்டத்தின் மூலம், தமிழக வேளாண்மை விவசாயிகளிடமிருந்து கைமாற்றி, கார்ப்பரேட்டு முதலாளிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. தமிழக விவசாயிகள் ஒட்டுமொத்தமாக ஏமாற்றப்பட இருக்கிறார்கள்.

இதுவரை விவசாயிகள் விவசாயம் செய்தார்கள். இந்த ஒப்பந்த வேளாண்மை முறையின் மூலம் பன்னாட்டு முதலாளிகள் இனி விவசாயம் செய்வார்கள். உள்ளூர் விவசாயிகள் அவர்களுடைய கைக் கருவிகளாகப் பயன்படுவார்கள். வேளாண்மை உற்பத்தி, இடுபொருள், பூச்சிக்கொல்லி , பயன்படுத்த வேண்டிய மரபீனி விதைகள், தொழில்நுட்பம் - என அனைத்தையும் முதலாளிகளே தீர்மானிப்பார்கள்.

தமிழகத்தின் வேளாண்மைச் சுதந்திரம் என்பது முற்றிலுமாகப் பறிக்கப்படும். இம்முறையில், விதைப்பதற்கு முன்பே கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும். ஒப்பந்தப்படி இது மாற்றப்படாது. ஒப்பந்தம் செய்த அன்று நிர்ணயித்த விலையிலேயே பரிமாற்றம் செய்யப்படும் என்று அரசு கூறுகிறது, நிர்ணயித்த விலைக்கு ஒப்பந்தப்படி நிறுவனங்கள் கொள்முதல் செய்து கொள்ளும் என்பது உண்மை. ஆனால் கொள்முதல் செய்த உற்பத்திப் பொருளை பிற நாடுகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் அந்நிறுவனங்கள் ஏற்றுமதி செய்து விடும். கொள்முதல் செய்யப்பட்ட பொருளுக்கு ஒப்பந்த நிறுவனங்களே கற்பனையிலும் நினைத்துப் பார்த்திராத விலையை நிர்ணயிக்கும். தாங்கள் விளைவித்த உற்பத்திப் பொருளை விவசாயிகள் தாங்களே பல மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கவேண்டும். நூறு மடங்கு அதிக விலையில் விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை திரும்ப வாங்க வேண்டிய நிலை ஏற்படும். 

கண்ணெதிரே வயல்கள் விளையும். ஆனால், அதை உண்ணப் போகிறவர்கள் பல நாடுகளில் இருப்பார்கள். வயல்கள் தமிழகத்திலேயே இருக்கும். ஆனால் அந்த விவசாயத்தை பன்னாட்டு முதலாளிகளே தீர்மானிப்பார்கள். உற்பத்தி செய்து கொள்முதல் செய்யப்பட்ட பொருளுக்கு என்ன விலை வேண்டுமானாலும் அவர்கள் வைக்கலாம்; எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் அனுப்பலாம். இவ்வாறு சந்தை சுதந்திரமும் விலை நிர்ணய சுதந்திரமும் அவர்களுக்கு இருக்கிறது. 
 

farmers issue


தமிழ்நாட்டு மக்கள் தமிழ் நாட்டில் வேளாண்மை நடைபெற்றாலும்கூட, ஒவ்வொரு உருண்டை சோற்றுக்கும் பன்னாட்டு நிறுவனங்களை அல்லது மத்திய அரசை எதிர்பார்த்துக் கையேந்தி காத்துக் கொண்டிருக்க வேண்டும்.  இப்போது தமிழ்நாட்டில் ஹரியானா, ஆந்திர, கர்நாடக அரிசியை தமிழக அரசு வாங்கி மக்களுக்கு தர வேண்டியுள்ளது. பிற மாநிலங்களில் உற்பத்தியாகும் அரிசிக்கு தமிழ்நாடு தான் சந்தை. இந்நிலையில் தமிழக வேளாண்மையை பெருமுதலாளிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டால் தமிழகம் தன்னுடைய உணவு உறுதிப்பாட்டை இழந்து, பெருமுதலாளிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும்.

இந்த ஒப்பந்த வேளாண்மையில் விதைப்பதற்கு முன்னரே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அது மாறாதது. அந்த விளைச்சலுக்கான இடு பொருட்களையும், தொழில் நுட்பத்தையும் அந்த பன்னாட்டு நிறுவனங்களிடமே  அதிக தொகை கொடுத்து விவசாயிகள் வாங்க வேண்டும். இது கட்டாயமானது. விளை பொருளுக்காக அளிக்கும் பணத்தை தொழில்நுட்பம், மரபீனி விதைகள் என்று அந்த நிறுவனங்களே திரும்பப் பிடுங்கிக் கொள்ளும். விவசாயம் செய்வது என்பதே இயலாத ஒன்றாக மாறும் சூழல் ஏற்படும். 

ஒப்பந்த விவசாயத்தில் ஒரு பகுதி விவசாயிகள் ஈடுபட்ட பிறகு, பிற விவசாயிகளும் ஒப்பந்த விவசாயத்தை ஏற்குமாறு கட்டாயப்படுத்தப் படுவார்கள். ஒப்பந்த விவசாயப் பகுதியில் பயன்படுத்தப்படும் மரபீனி விதைகள் அனைத்து வயல்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

விளைச்சல் வீழ்ச்சி அடைந்தால் விவசாயிகளின் நிலை என்ன? எந்த அளவிற்கு விளைந்து இருக்கிறதோ, அந்த அளவிற்கு ஒப்பந்த நிறுவனங்கள் பணம்  தருவார்கள். வறட்சியாலோ, வெள்ளத்தாலோ விவசாயிகளுக்கு நட்டம் ஏற்பட்டால், நட்டஈடு என்றோ, அல்லது நிவாரணத்தொகை என்றோ ஏதும் வழங்கப்படாது. இதனால், விவசாயிகளின் தற்கொலை அதிகமாகும்.

தமிழக அரசு தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் போக்கைக் கை விட வேண்டும். தமிழக விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வை விவசாயிகளே கூறுகிறார்கள். அவர்கள் உற்பத்திப் பொருளுக்குக் கட்டுப்படியாகும் விலை தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

2011 இல் எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைத்தபடி, உற்பத்திச் செலவும், அந்த உற்பத்தி செலவில் பாதி அளவு சேர்த்தும் அளிக்கப்படும் விலை தான் கட்டுபடியாகும் விலை . அந்த கட்டுபடியாகும் விலையைக் கொடுத்தால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியோடு விவசாயத்தை தொடரக் காத்திருக்கிறார்கள்.

அதுபோலவே  காப்பீடு இழப்பீட்டுத் தொகையை முறையாக காப்பீட்டு நிறுவனங்கள் தமிழக விவசாயிகளுக்கு வழங்கினால், அதுவே அவர்களுக்குப் போதுமானது. விவசாயிகளின் கோரிக்கையும் அதுதான். இதைச் செய்து கொடுப்பதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? 

தமிழக விவசாயத்தில், குறிப்பாக காவிரிப்படுகை பகுதியில், 2015 க்குப் பிறகு மிகப் பெரிய மாறுதல் நிகழ்ந்துள்ளது. படித்த இளைஞர்கள் இப்போது வேலை தேடுவதற்குப் பதிலாக விவசாயத்திற்குத் திரும்பியுள்ளார்கள். பாரம்பரிய மீட்பு உணர்வுடன், பழைய அடையாளங்களைத் தேடும் உணர்வுடன், பாரம்பரிய விவசாயத்தை இளைஞர்கள் முன்னெடுக்கிறார்கள். பூச்சிச் தாக்குதல் இல்லாமல், இரசாயன உரமில்லாமல், இயற்கை முறையில் உற்பத்தி செய்து, மதிப்புக்கூட்டி , நேரடி விற்பனை செய்யும் எண்ணத்துடன், சிறப்பாக விவசாயத்துக்குப் புத்துயிர் கொடுத்து இயற்கை வேளாண்மையை நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.  இதனால் பூச்சி மருந்துகளின் விற்பனையும்,  இரசாயன உரங்களின் விற்பனையும் குறைந்து வருகிறது. தற்சார்பு வேளாண்மை மீண்டும் நிறுவப்படும் நம்பிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், பெருமுதலாளிகள் தமிழகத்தின் மொத்த விவசாயத்தையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்புகிறார்கள். மத்திய அரசு பன்னாட்டு முதலாளிகளின் விருப்பத்தை நடைமுறைப்படுத்த முயற்சி செய்தாலும், பிற மாநிலங்கள் எச்சரிக்கை உணர்வுடன் வாய் மூடி இருக்கின்றன. பெரு முதலாளிகளின் பின்னணியில் செயல்படும் மத்திய அரசின் ஆணைக்கு ஏற்ப, தமிழக அரசு அவசரமாகச் சட்டமியற்றி தமிழக வேளாண்மையை முச்சந்தியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

தமிழக அரசு இதற்கு இடம் கொடுத்திருக்கக் கூடாது. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம், தமிழக அரசின் வேளாண்மை துறை இப்போது பன்னாட்டு நிறுவனங்களின் ஏவல் துறையாக மாற்றப்படும்.  ஒரு சட்டம் கொண்டு வரப்படும் போது, அதன் பின்னணி என்ன, அதன் உண்மையான நோக்கம் என்ன? என்பதை சட்டமன்றம் பரிசீலிக்க வேண்டும். தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் சேவைகள் ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, தமிழக சட்டமன்றம் அதை முறையாக பரிசீலிக்கவில்லை, ஆய்வு செய்யவில்லை என்று கூறலாம்.  

14 .2. 2019 அன்று சட்டத்திற்கு சட்டமன்றம் ஒப்புதல் கொடுத்து விட்டது. அக்டோபர் 29ஆம் தேதி குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று இப்போது அச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.

இந்நிலையில் இதை எப்படி எதிர்க்கப் போகிறோம் என்பது மிகப்பெரிய கேள்வி. இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஒரு பொருளாதாரச் சதி வலைக்குள் தமிழக வேளாண்மை அகப்பட்டு விட்டது என்று பொருள். ஆகவே விவசாயிகள் இச்சட்டத்தை ஏற்கக் கூடாது. இச்சட்டத்தை எதிர்த்து விவசாயிகளும் விவசாய பொருட்களை நுகர்ந்து வாழும் பொதுமக்களும் களத்தில் இறங்கிப் போராடியாகவேண்டும்.


தமிழக அரசு பன்னாட்டு முதலாளிகளின் கனவுகளுக்கு சட்ட வடிவம் கொடுப்பதை தன்னுடைய வேலையாக கொண்டு செயல்படக்கூடாது. தமிழக மக்களுக்கு, தமிழக விவசாயத்திற்கு எது நன்மை என்று ஆய்ந்து, அறிந்து அவற்றை மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும். நிறைவேற்றப்பட்டிருக்கும்  தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் சேவைகள் சட்டத்திற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தன் எதிர்ப்பை பதிவு செய்கிறது. இச்சட்டத்தை விவசாயிகளும், மக்களும் ஏற்கக்கூடாது." என்கிறார் விவரமாக

 

சார்ந்த செய்திகள்