கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் கடந்த ஜீன் மாதம் 17 ஆம் தேதி கோவிலாபூண்டி- மீதிகுடி கிராமப் பகுதி சாலையில் அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கேரளா மற்றும் கர்நாடகா பல்கலைக்கழகத்தின் போலிச் சான்றிதழ்கள் கிடந்தன. இது பற்றி கிடைத்த தகவலின் பேரில், சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகுபதி தலைமையில் கிளை போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு சாலையில் கிடந்த போலிச் சான்றிதழ்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
இது தொடர்பாக, சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் தீட்சிதர், நாகப்பன் ஆகிய இருவரையும் 18 ஆம் தேதி இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், கிளை போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தியதில் இதில் இன்னும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த வகையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆட்டோ டிரைவர் பீட்டர், பெங்களூரைச் சேர்ந்த கௌதமன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையில் போலீசார் நடத்திய விசாரணையில், சங்கர் தீட்சிதரின் உறவினரான அனுராதா என்பவர் தான், சிதம்பரத்தில் உள்ள வீட்டில் போலிச் சான்றிதழ்களை கம்ப்யூட்டர் மூலம் தயாரித்து கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த அடிப்படையில், அனுராதா வீட்டில் இருந்த ஏராளமான போலி சான்றிதழ்கள், அதை தயாரிக்க பயன்படுத்திய லேப்டேப், பிரிண்டர் போலி முத்திரை, போலி அடையாள அட்டைகள் செல்போன் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், தயார் செய்யப்பட்ட போலி சான்றிதழ் பார்சல் செய்யப்பட்டு சிதம்பரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பீட்டர் மூலம் ஆட்டோவில் சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் காரில் காத்திருக்கும் பெங்களூரைச் சேர்ந்த கௌதமனிடம் கொண்டு போய் சேர்த்ததும், அதன் பிறகு கௌதமன் அந்த போலி சான்றிதழ்களை பெங்களூருக்கு எடுத்து சென்று பல்வேறு நபர்களுக்கு அதிக அளவில் பணம் பெற்றுக்கொண்டு விநியோகம் செய்ததும் தெரியவந்தது.
இதற்கிடையில், கைது செய்யப்பட்டுள்ள நாகப்பன், சங்கர் தீட்சிதர் ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் கடந்த சில வருடங்களாக பல கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்ட விவரங்களை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்த வேளையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி போலிஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், நடத்திய தீவிர புலன் விசாரணையில், அருட்பிரகாசம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அகில இந்திய சித்த மருத்துவ மாநிலத் தலைவராக உள்ள திருச்சியைச் சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்பவர் தான், போலி சான்றிதழ் தயாரித்த கும்பலுக்கு ஏஜென்ட் போல் செயல்பட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில், கடலூர் சி.பி.சி.ஐ.டி போலீசார் திருச்சி குறிஞ்சி நகரில் உள்ள சுப்பையா பாண்டியன் வீட்டிற்கு சென்று அவர் வீடு முழுவதும் தொடர்ந்து சோதனை நடத்தியிருக்கிறார்கள். அதில், சுப்பையா பாண்டியன் மற்றும் அவரது மனைவி தமிழரசி பாண்டியன் பெயரில் இருந்த போலி சான்றிதழ்களை கண்டுபிடித்தனர். அதன் பின்னர், சுப்பையா பாண்டியனை கைது செய்து கடலூர் கொண்டு சென்றனர்.
இந்த நிலையில், நாம் கடலூர் சி.பி.சி.ஐ.டி வட்டாரத்தில் பேசினோம். அதில், ‘அனுராதா என்பவர் ஐ கோர்ட்டில் பெயில் எடுத்திருக்கிறார். அதனால் அவருக்கு தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை தீவிரமாக விசாரித்து கொண்டிருக்கிறோம். அதேபோல் கௌதமன், பீட்டர் ஆகியோரை நெருக்கமாக தேடிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலையில், போலி சான்றிதழ் விவகாரத்தில் நாங்கள் பலருக்கும் சம்மன் போட்டு விசாரணைக்கு ஆஜராக சொன்னோம். ஆனால் யாரையும் ஆஜராக விடாமல், எங்கள் விசாரணைக்கு தடை போட்டுக்கொண்டே வந்ததே இந்த சுப்பையா பாண்டியன் தான். ஒரு கட்டத்தில் இவர் தான் போலியாக சர்ட்டிபிகேட் வாங்கி கொடுக்கிறார் என்பதை நாங்கள் ஆதாரங்களுடன் முடிவு செய்தோம். வாங்கியவர்களே இவர் தான் வாங்கி கொடுத்தார் என்று சொன்னதற்கான ஆதாரங்கள் எங்களிடம் பக்காவாக இருக்கிறது. ஆனாலும், இவரை கைது செய்து நீதிபதியிடம் நாங்கள் ஆஜர்படுத்தியபோது, தான் எந்த தவறும் செய்யவில்லை என்று தான் சொல்கிறார். இன்னும் பிடிக்க வேண்டிய ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். எங்கள் விசாரணை தொடர்ந்து கொண்டே இருக்கும்போது பெரிய பூகம்பங்கள் கிளம்பும்’ என்றாரகள்.
திருச்சியில் சுப்பையா பாண்டியனை பற்றி விசாரித்த போது, “அவர் தன் அனைத்திந்திய சித்த மருத்தவ சங்க அமைப்பை காப்பாற்றுவதற்காகவே அடிக்கடி கட்சி மாறுவார். சுப்பையா பாண்டியனும், அவரது மனைவி தமிழரசி பாண்டியனும், ஏற்கனவே அ.தி.மு.கவில் இருந்தார்கள். தமிழரசி பாண்டியன் மகளிரணி மாவட்ட செயலாளராகவும் இருந்தார். அ.தி.மு.க ஆட்சி காலத்தில் நல்லாவே தொழிலை நடத்தினார்கள். அ.தி.மு.க ஆட்சி மாறி தி.மு.க ஆட்சிக்கு வரவும் அப்படியே தி.மு.க.வுக்கு தங்கள் ஜாகையை மாற்றினார்கள். அமைச்சர் நேரு, எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் முதல் ஆளாக இருவருமே வந்து போஸ் கொடுத்துவிட்டு அதை சில பத்திரிகைகளுக்கும் கொடுத்து தங்கள் இருப்பை பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இவங்க தி.மு.கவுக்கு வந்தது தி.மு.கவில் உள்ள பலருக்கும் பிடிக்கவில்லை. ஆனாலும், தி.மு.க.வில் மாவட்ட அளவில் தன் மனைவி தமிழரசி பாண்டியனுக்கு பொறுப்புகள் வாங்க எவ்வளவோ மெனக்கெட்டார் சுப்பையா பாண்டியன். ஆனால், அமைச்சர் நேருவிடம் இருப்பவர்களோ அதற்கு இடம் கொடுக்கவில்லை. இருந்தாலும் அமைப்பு சார்பாக சித்த மருத்துவ நிகழ்ச்சிகள் பல நடத்தி அதில் அமைச்சர் நேரு மற்றும் பல பிரபலங்களை கலந்துகொள்ள வைத்து அனைத்து இந்திய சித்த மருத்துவ சங்கத்தை மேலும் வளர்க்க ஆரம்பித்தனர்” என்றார்கள்.
அதேபோல் நம்மிடம் பேசிய சில அரசு சித்தா டாக்டர்கள், “சார் சுப்பையா பாண்டியனை பற்றி பழைய பைல் ஒன்றை வைத்து நீண்ட புகாராக திருச்சி அரசு சித்த மருத்துவர்கள் அமைப்பினர் மற்றும் அப்போதைய சித்த மருத்துவ டீன் காமராஜ் ஆகியோர் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் சித்த மருத்துவருக்கான எந்த தகுதியும் சுப்பையா பாண்டியனுக்கு கிடையாது, அவர் ஒரு போலி வைத்தியர் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் தொடர்புகள் சுப்பையா பாண்டியனுக்கு வலுவாக இருந்ததால் அவர் தப்பித்து வந்தார். அதேபோல் சுப்பையா பாண்டியனால் தமிழகம் முழுவதும் அல்ல, கேரளாவிலும் ஏகப்பட்ட போலி வைத்தியர்கள் உலா வருவதோடு அவர்கள் நோயாளிகளின் உயிருக்கும் உலை வைப்பது தான் கொடுமையான விஷயம்.
இதில் இன்னொரு கொடுமையான விஷயம் என்னவென்றால், சுப்பையா பாண்டியன் புதுதில்லி பத்திரிகையாளர் சங்கத்தில் தேசிய குழு உறுப்பினராக இருந்து, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டு தான் ஒரு பத்திரிகையாளன் என்ற போர்வையிலும் தப்பித்து வந்துள்ளார். இதற்கு வெகுமதியாக அந்தந்த பத்திரிகையாளர் சங்க நிகழ்ச்சியின் சில செலவுகளையும் ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. ஆகவே தமிழக அரசு, அமைச்சர் நேருவோடு நெருக்கத்தில் இருப்பதாக சொல்லிக்கொண்டு அலையும் போலி சித்தா டாக்டர் சுப்பையா பாண்டியன் மீது முழுமையான விசாரணை செய்து இவருக்கு பின்னணியில் உள்ள, இவர் கொடுத்த போலி சான்றிதழ்கள் மூலம் போலி சித்தா டாக்டர்கள் ஆனவர்கள் பற்றிய விபரங்களையும், தோண்டி துருவி எடுத்து விசாரணை வளையத்துக்கு கொண்டு வந்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று வேண்டுகோள் வைத்தனர்.