
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளைகள் வாடிவாசல்களில் அடுத்தடுத்து அடிபட்டு இறப்பதால் அவரது குடும்பமே சோகத்தில் உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கருக்கு ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம். தனது வீட்டிற்கு வந்த கொம்பன் காளை பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. ஆனால், சில ஆண்டுகளில் தென்னலூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் ஆக்ரோசமாக வெளிவந்த கொம்பன் தடுப்புக் கட்டையில் மோதி அதே இடத்தில் பலியானது. அதன்பிறகு வெள்ளைக்கொம்பன், சின்னக்கொம்பன், கருப்புக் கொம்பன் என பல காளைகள் வந்தது.

நேற்று முன்தினம் வடசேரிப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பார்வையாளர் மாடத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். இந்த ஜல்லிக்கட்டில் அவரது கருப்புக் கொம்பன் காளையும் பங்கேற்றது. அப்போது, “முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கருப்புக் கொம்பன் வருது முடிஞ்சா புடிச்சுப் பார், தொட்டுப் பார்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரோஜாப்பூ மாலையுடன் ஆக்ரோசமாக வெளியே வந்த போது பழைய கொம்பனைப் போலவே கருப்புக் கொம்பனும் தடுப்புக் கட்டையில் மோதி சரிந்தது. அங்கு நின்ற போலீசார் மற்றும் காளையுடன் வந்தவர்கள் காளையை மீட்டு ஒரத்தநாடு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 2 நாட்கள் வரை தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி கருப்புக் கொம்பன் பரிதாபமாக உயிரிழந்தது.

கருப்புக் கொம்பனும் நம்மள விட்டு போயிட்டான் என்று சென்னையிலிருந்த விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.வுக்கு தகவல் சொன்னதும் வருத்தமடைந்த அவர் உடனே கிளம்பி ஊருக்கு வந்தார். அங்கு அவர் உட்பட குடும்பமே தாங்கள் ஆசையாக அன்பாக வளர்த்த கருப்புக் கொம்பனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்தில் அடுத்தடுத்து காளைகள் வாடிவாசலில் மோதி உயிரிழக்கும் சம்பவம் தொடர் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.