நாடு முழுவதும் சமீப காலமாகப் பள்ளிகளுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில் அது புரளி எனத் தெரியவருகிறது. அந்த வகையில் இன்றும் (29.08.2024) பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஈரோடு சேனாதிபதி பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு இன்று காலை 8.15 மணிக்குப் பள்ளியின் இணையதளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அதில் உங்கள் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடித்து விடும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியிலும் மாணவ -மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் தகவலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டனர்.
காலை 8:15 மணி என்பதால் பெரும்பாலான மாணவ - மாணவிகள் பள்ளிக்கு வந்துவிட்டனர். பள்ளி வாகனங்களில் பல்வேறு பகுதியிலிருந்து வந்த மாணவ - மாணவிகள் அவசர அவசரமாகத் திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் பெற்றோருக்கும் இன்று ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை எனக் குறுஞ்செய்தி பள்ளி நிர்வாகம் சார்பாக அனுப்பப்பட்டது. இதைப் பார்த்து குழப்பம் அடைந்த பெற்றோர் இதுகுறித்து விசாரித்த போது பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது தெரிய வந்தது. இதனால் பெற்றோர்கள் பதறி அடித்துக் கொண்டு பள்ளிக்கு விரைந்து வந்தனர். மாணவ - மாணவிகள் பெற்றோருடன் அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் விடுதியில் தங்கிப் படித்த மாணவ மாணவிகள் அவசரமாக தங்களது பொருட்களுடன் வெளியேற்றப்பட்டனர். அதே சமயம் மாணவ மாணவிகள் அருகே உள்ள பள்ளி மைதானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து பெற்றோருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பெயரில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவு போலீசார், அதிவிரைவு படை போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு சென்றனர். பள்ளியின் ஒவ்வொரு பகுதியாகவும், ஒவ்வொரு வகுப்பறையாகவும் அங்குலம் அங்குலமாக மெட்டல் டிடெக்டர் கருவியைக் கொண்டு சோதனையிட்டனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தனியார் பள்ளிக்குச் சென்று பார்வையிட்டு பள்ளியின் வரைபடத்தையும் பார்வையிட்டார். முன்னெச்சரிக்கையாகப் பள்ளியின் முன்பு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.