தலைநகர் தொடங்கி இந்தியா முழுவதும் நடக்கும் போராட்டம் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரித் தான். ஈரோட்டில் தொடர்ந்து 5ஆம் நாளாக இஸ்லாமியா்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான வழியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏதும் இல்லாமல் காலை முதல் மாலை வரை போராட்டம் நடக்கிறது. நான்கு நாட்களாக அமைதியாக விட்ட போலீசார் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், ஆண்கள் என 200பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு தினசரி மார்க்கெட் பின்புறம் உள்ள செல்லபாட்ஷா வீதியில் சென்ற 21ம் தேதி முதல் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த பெண்கள், ஆண்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 5 நாட்களாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் பல அமைப்பை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அனுமதியின்றி பொது இடத்தில் போராட்டம் நடத்துவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாக ஈரோடு நகர போலீசார் 3 பிரிவுகளின் கீழ் போராட்டகாரர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஏற்கனவே பதிவு செய்த வழக்குப் படி கைது நடவடிக்கை இருக்கும் என போலீசார் கூறியிருக்கிறார்கள்.