Skip to main content

“பாஜகவினரின் அடியாள் துறையாக அமலாக்கத்துறை மாறியுள்ளது” - சீமான் ஆவேசம்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Enforcement department has become a servant department of BJP Seeman

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் என்பவருக்கு கடந்த ஜூலையில் அமலாக்கத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் உள்ள முகவரியில் சாதி பெயரை குறிப்பிட்டு சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜூலை மாதம் 5 ஆம் தேதி ஆஜராக கூறி சம்மன் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் சாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அமலாக்கத்துறையின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள ராமநாயக்கன் பாளையம் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளான கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோருக்கு அவர்களின் சாதிப்பெயரைச் சொல்லி அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டின் பழந்தமிழ் தொல்குடிகளில் ஒன்றான தேவேந்திரகுல வேளாளர்களின் குடிப்பெயரினை நாங்கள்தான் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டோம் என்று பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பேசி வந்த நிலையில், தற்போது அதே அரசின் கீழ் இயங்கும் அமலாக்கத்துறையே அம்மக்களை இழிவுப்படுத்தும் நோக்கத்துடன் சாதிப் பெயரினை குறிப்பிட்டு அழைப்பாணை அனுப்பியுள்ளது, பாஜகவின் மனுநீதி முகத்தையே காட்டுகிறது.

இந்திய அரசியலைப்பு அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையம், குற்றப்புலனாய்வுத்துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட தன்னாட்சி சட்ட அமைப்புகளை தங்களின் கைப்பாவையாக மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, ஆத்தூர் விவசாயிகள் கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோருக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை மிரட்டி வாங்க முற்படும் பாஜகவின் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் குணசேகரனின் தூண்டுதலின் பேரில் வேளாண் பெருங்குடி மக்களின் சாதிப்பெயரை குறிப்பிட்டு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ள கொடும் நிகழ்வு தற்போது அரங்கேறியுள்ளது. தற்போது மேலும் ஒருபடி முன்னேறி ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் பாஜகவினரின் அடியாள் துறையாக அமலாக்கத்துறை மாறியுள்ளது வெட்கக்கேடானது.

Enforcement department has become a servant department of BJP Seeman

தமக்கு சொந்தமான நிலத்தில் வேளாண்மை செய்ய முடியாமல் பாஜக நிர்வாகி குணசேகரனால் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து, போதிய வருமானமின்றி அன்றாட உணவிற்கே திண்டாடிவரும் ஏழ்மையான விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்ப வேண்டிய அவசியம் என்ன வந்தது. அண்மையில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் கேட்டு சிக்கிய நிகழ்வு தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள நிலையில் ஏழை விவசாயிகளுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளதன் மூலம் அமலாக்கத்துறையில் தொடர்ச்சியாக மிகப்பெரிய ஊழல்கள் நடைபெறுவது மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது. எதிர்க்கட்சியினரையும், நேர்மையான ஊடகவிலாளர்களையும், பாஜகவின் பாசிச ஆட்சியை விமர்சிப்பவர்களையும், இந்துத்துவக் கொள்கைக்கு எதிரானவர்களையும், மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் பழிவாங்க அமலாக்கத்துறைக்கு கட்டற்ற அதிகாரமும், சுதந்திரமும் மோடி அரசு கொடுத்ததன் விளைவே இந்திய அளவில் முறைகேடுகள் நிறைந்த அமைப்பாக அமலாக்கத்துறையை மாற்றியுள்ளது.

ஆகவே, சாதிய வன்மத்துடன் ஆத்தூர் விவசாயிகளுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை அமலாக்கத்துறை உடனடியாகத் திரும்பப்பெறுவதுடன் அவர்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கோர வேண்டுமெனவும், இனியும் இதுபோன்று அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி எளிய மக்களை மிரட்டும் கொடும்போக்கினை அமலாக்கத்துறை கைவிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்