கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, அமமுக தலைமையிலான கூட்டணி, மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணி போட்டியிட்டது. நாம் தமிழர் கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதியான நேற்று நடைபெற்றது. முதலமைச்சர் வேட்பாளர்களாக ஐந்து பேர் களத்தில் இருந்தனர். இதில் எடப்பாடி பழனிசாமியும், மு.க. ஸ்டாலினும்தான் அமோக வெற்றி பெற்றனர். திமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு சேலத்தில் இருந்தபடியே எடப்பாடி பழனிசாமி ராஜினாமா கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார். 15 ஆவது சட்டப்பேரவையைக் கலைப்பதாகவும், புதிய அரசு பொறுப்பேற்கும் வரை காபந்து அரசாகச் செயல்படுமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.