தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள அனைத்து டெண்டர்களும் 100 சதவீதம் நேர்மையாகவே நடந்துள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலத்தில் இன்று (அக்டோபர் 20, 2018) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காமலாபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
சபரிமலை விவகாரம் குறித்து உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிவிப்புக்கும், தமிழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம் தேவையற்றது. அரசின் நிதிச்சுமையை உணர்ந்து அவர்களே ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறோம்.
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்குவதை கருத்தில் கொண்டு, பாதிப்புகளை தவிர்ப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆட்சி கலையும். கட்சி உடையும் என்று எதிர்க்கட்சியினர் நினைத்தார்கள். அது நடக்கவில்லை. அந்த விரக்தியில் ஆட்சியில் ஊழலும், டெண்டர்களில் முறைகேடுகளும் நடப்பதாக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஒருவனை திருடன் என்றால், அவன் எப்போது எந்த இடத்தில் எப்படி திருடினான் என்று கூற வேண்டும். ஆனால் அதற்குரிய பதில், இதுவரை வரவில்லை. விதிமுறைகளை மீறி, எனது உறவினருக்கு டெண்டர் விட்டதாக கூறுகின்றனர். அவருக்கு திமுக ஆட்சியின்போதே பத்துக்கும் மேற்பட்ட டெண்டர்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.
திமுக ஆட்சியின்போது வகுக்கப்பட்ட விதிமுறைகளின்படியே டெண்டர் விடப்பட்டுள்ளது. தற்போது டெண்டர் விடும் பணிகள் அனைத்தும் 100 சதவீதம் நேர்மையாகவே நடந்துள்ளன. அனைத்துமே ஆன்லைன் வழியாக நடப்பதால் எந்த முறைகேடுகளுக்கும் வழியில்லை.
அரசு யாருக்கும் சலுகை காட்டவில்லை என்பதை தெளிவாக தெரிவித்துக்கொள்கிறேன். முறைகேடு என்று புகார் செய்ததால், அரசிடம் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான விசாரணை எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாமல், நேர்மையாக நடக்க வேண்டும் என்பதற்காகவே எடுத்த முடிவை வரவேற்கிறோம். இதற்காக குற்றம் செய்துவிட்டோம் என்று கூறுவது ஏற்புடையது அல்ல.
நீதிமன்றத்தை நாங்கள் கோயிலாக கருதுகிறோம். எனவே விசாரணையில் தெளிவான முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.