நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இந்நிலையில் 'சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன்' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''அதிமுக இன்னும் கூட்டணியை உருவாக்கவில்லை. பாஜக கூட்டணிக்கு ஆட்கள் தேடிக் கொண்டிருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டை பொறுத்தவரையில் எதிர்க்கட்சிகளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு அல்லது எதிர்க்கட்சி கூட்டணி இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு நிலைமை உள்ளது.
நாங்கள் கேட்டிருப்பது நான்கு தொகுதிகள். அந்த நான்கு தொகுதிகளில் ஒரு தொகுதி பொதுத்தொகுதி. மூன்று தொகுதி தனித் தொகுதி என்ற கோரிக்கையை நாங்கள் வைத்துள்ளோம். ஆனால் 8, 10 கூட்டணிக் கட்சிகள் உள்ள ஒரு கூட்டணியில் இவ்வளவு தொகுதிகளைப் பெற முடியாது என்பதையும் நாங்கள் அறிவோம். சூழலுக்கு ஏற்ப முடிவு செய்வோம். சிதம்பரம் என்னுடைய சொந்த தொகுதி. எனவே எந்த கேள்விக்கும், குழப்பத்திற்கும் இடம் இல்லை. இது என்னுடைய சொந்த தொகுதி. இதில் தான் நான் போட்டியிட முடியும்'' என்றார்.