காமராசரின் சமதர்மத் திட்டத்தால் 'கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்ற பழமொழியை மறைந்து' பள்ளி இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்...! எனுமளவிற்கு மாறியுள்ள காலம் இது.! அப்படியிருக்கையிலே, "ஒழுங்கீன நடவடிக்கைகளால் அப்புறப்படுத்தப்பட்ட ஆசிரியை மீண்டும் இடமாற்றம் எனும் பெயரில் இங்கு கொண்டு வரக்கூடாது.!" என உடற்கல்வி ஆசிரியை ஒருவருக்கெதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர் கிராமமக்கள்.
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியினை முன்னிறுத்தித் தான் இந்த குற்றச்சாட்டே.! தொடக்கத்தில் 1200 மாணவர்கள் வரை படித்து வந்த கொல்லங்குடி அரசு மேல் நிலைப்பள்ளியில் தற்பொழுது சுமார் 700 மாணக்கர்கள் மட்டுமே கல்வி பயில்கின்றனர். அதற்குக் காரணமாக குறிப்பிடுவது, "ஏற்கனவே இங்கு உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றி மாற்றலாகிய அருள் கலைச்செல்வியே.!! மீண்டும் இதே பணியிடத்திற்கு வர பணத்தை வாரி இறைத்து வருகின்றார். அவர் இங்கு வரும் பட்சத்தில் மாணக்கர்களின் சேர்க்கை எண்ணிக்கை வெகுவாக குறைந்ததோடு மட்டுமில்லாமல், மாணக்கர்களிடையே ஒழுங்கீனமும் நிலைக்கும் அவரே காரணம். ஆகவே அவர் இங்கு வேண்டாம்." என மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் கோரிக்கை வைத்துள்ளனர் இக்கிராம மக்கள்.
"பள்ளியிலேயே மாத்திரைகளை விற்பது, தனக்கு ஒத்துப் போகாத ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டினை வைக்க, பொய்யாக மாணவிகளை தயார் படுத்துவது, பள்ளியில் உள்ள மாணக்கர்களிடையே தவறான பண்பினை விதைத்து அவர்களை ஒழுங்கீனமாக மாற்றுவது உள்ளிட்ட விவகாரங்களால் தான் 4 ஆண்டிற்கு முன் இங்கிருந்த உடற்கல்வி ஆசிரியை அருள் கலைச்செல்வி இடமாற்றம் செய்யப்பட்டார். இப்பொழுது புதிதாக பதவியேற்றுள்ள கல்வி அதிகாரி சாமி சத்யமூர்த்தியை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு, இதே இடத்திற்கு இடமாற்றலாகி வர, அதிக பணத்தை இறக்கி செலவு செய்து வருகின்றார் அந்த உடற்கல்வி ஆசிரியை.! அவர் மீண்டும் வந்தால் பள்ளிக்கு நல்லதல்ல.! ஒழுங்கீனமான ஆசிரியை எங்கள் கிராமப் பள்ளிக்கு வேண்டாம்." என்கின்றனர் அந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருநாவுக்கரவும், பள்ளிக்கல்விக்குழு தலைவர் காளிமுத்துவும். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.