Skip to main content

''கரோனா நேரத்தில் மக்களோடு மக்களாக நின்றது திமுக'' - முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

 "DMK stood with people as people during Corona"- Chief Minister M.K. Stalin's campaign

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணிக்கு முடிவடையவுள்ள நிலையில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கான முதல்வர் ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

 

இந்நிலையில் ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''பெரியார் பிறந்த இந்த மண்ணில் உங்களை எல்லாம் சந்தித்து வருகின்ற 27 ஆம் தேதி நாளை மறுநாள் நடைபெற இருக்கக்கூடிய ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நம்முடைய வேட்பாளராக, திமுகவின் ஆதரவு பெற்ற வேட்பாளராக, தோழமைக் கட்சிகளின் துணையோடு நிற்கக்கூடிய மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளராக வாக்கு கேட்டு நிற்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் கை சின்னத்தை ஆதரித்து மிகச் சிறப்பான வெற்றியை தேடி தர வேண்டும் என்று கேட்பதற்காக நான் உங்களை தேடி நாடி வந்திருக்கிறேன்.

 

பெரியார் பிறந்த இந்த மண்ணில், அறிஞர் அண்ணா வாழ்ந்த இந்த மண்ணில், கலைஞர் குருகுலமாக போற்றி கொண்டாடிய இந்த மண்ணில் உங்களை சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தேர்தல் விதிமுறைப்படி மூடப்பட்டு இருக்கிறது நமது கலைஞரின் திரு உருவச்சிலை. இந்த சிலையை நான் தான் திறந்து வைத்தேன். கலைஞர் மறைவுக்கு பிறகு முதன்முதலாக அண்ணா அறிவாலயத்தில் தான் கலைஞருடைய உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எந்த மாவட்டத்தில் முதலில் தொடங்கிட வேண்டும் என்று முடிவெடுத்தபோது அவர் குருகுலமாக கருதிய ஈரோட்டில் தான் திறந்திட வேண்டும் என்று முடிவு செய்து அந்த பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டு அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர் இந்த மாவட்டத்தின் செயலாளராக இருக்கக்கூடிய வீட்டு வசதித்துறை அமைச்சராக இருக்கக்கூடிய முத்துசாமி. கலைஞர் சிலையின் அருகில் நின்று கொண்டு உங்களை சந்திப்பது, உங்களிடம் ஆதரவு கேட்பது, கை சின்னத்திற்கு வெற்றியை தேடி தாருங்கள் என கேட்பது மிக மிக பொருத்தமாக அமைந்திருக்கிறது. இது இடைத்தேர்தல் அல்ல திராவிட மாடல் ஆட்சியை எடைபோடும் தேர்தல். 

 

அதிமுக நிறுத்தியிருக்கும் வேட்பாளர் ஏற்கனவே இங்கு எம்எல்ஏவாக இருந்தவர். அவர் இந்த தொகுதிக்கு, இந்த பகுதிக்கு நல்ல காரியங்கள் ஏதேனும் செய்திருக்கிறாரா? என்று கேட்டால் கிடையாது. ஒரே ஒரு உதாரணத்தை உங்களிடம் குறிப்பிட விரும்புகிறேன். கரோனா என்ற ஒரு கொடிய காலம் வந்தது. ஏறக்குறைய இரண்டு வருடம் பல கொடுமைகளை நாம் அனுபவித்தோம். அந்த கரோனா வந்த நேரத்தில் இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதேனும் நன்மைகளை உதவிகளை செய்து இருக்கிறாரா என்றால் கிடையாது. ஆனால் திமுக சார்பில் இன்று மாவட்டத்தின் செயலாளரான முத்துசாமி தலைமையில் திமுகவினர் மக்களோடு மக்களாக நின்று துணையாக இருந்தார்கள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்