
உர விலை உயர்வு, தீர்ப்பாயங்கள் கலைப்புக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மனிதாபிமானமற்ற மத்திய பா.ஜ.க. அரசு உர விலையை அதிகரித்திருக்கிறது. 58% உர விலை உயர்வின் மூலம் 50 கிலோ டி.ஏ.பி. உர மூட்டையின் விலை 1,200 ரூபாயிலிருந்து 1,900 ரூபாயாக உயர்ந்திருக்கிறது; என்.பி.கே. உரங்களின் விலையும் 50% வரை உயர்ந்து நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்து விட்டு பிறகு திரும்பப் பெற்றது இந்த அரசு. உர விலையை உயர்த்தி விட்டு இப்போது அமல்படுத்தமாட்டோம் என்று கண்ணாமூச்சி விளையாட்டு நடத்துகிறது.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறனின் முயற்சியால் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் சென்னையில் துவங்கப்பட்டது; காப்புரிமை, பதிப்புரிமை, புவிசார் குறியீடு தொடர்பானவற்றில் மிக முக்கியப் பங்காற்றியது. தமிழ்நாட்டின் மீது உள்ள எரிச்சலில் இந்த தீர்ப்பாயத்துடன் சேர்த்து இன்னும் 7 தீர்ப்பாயங்களைக் கலைத்துள்ளது மத்திய பா.ஜ.க. அரசு! இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதி. துரோகம் செய்துள்ள பா.ஜ.க. அரசை விவசாயிகளும், தமிழக மக்களும் என்றைக்கும் மன்னிக்கமாட்டார்கள்". இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.