
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு உட்பட தென்மாநிலங்கள் பாதிக்கப்படுவது குறித்து விவாதித்து சில முடிவுகளை எடுப்பதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை நேற்று (22-03-250 நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், பஞ்சாப் முதல்வர் பகவத் மான் மற்றும் பிற மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அக்கட்சிகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் வாயிலாக, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனுசாமி இன்று (23-03-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “திமுகவின் நான்காண்டு ஆட்சியில் நடந்த பிரச்சனைகளை மறைப்பதற்காக, சென்னையில் தனியாக கூட்டம் நடத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார். நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் தான் கேட்க வேண்டும். இது குறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே திமுக எம்.பிக்கள் நடத்திய போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பிக்கள் கலந்து கொள்ளவில்லையே. அப்படி காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தால், முதல்வர் ஸ்டாலின் எடுக்கிய முயற்சி பலனளிக்கும் என்று சொல்லலாம்.
திமுக ஆட்சியில், லஞ்சம் ஊழல் அதிகரித்திருக்கிறது, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. இதனால், தமிழக மக்கள் பெரும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். இதை மடைமாற்றுவதற்காக, நேற்றைய தினம் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதிமுகவை பொறுத்தவரை, மக்களுடைய பிரச்சனைகளை தான் நாங்கள் சொல்கிறோம். தனிப்பட்ட முறையில் நாங்கள் யாரையும் குற்றம் சொல்லவில்லை. மதுபான விற்பனையில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்டிருக்கிறது. எனவே, திமுக ஆட்சியில் ஊழல் நடைபெறும் என்பது நிரூபணமாகியுள்ளது. கலால் துறையில் மட்டுமல்ல, அனைத்து துறையிலுமே ஊழல் தலைவிரித்து ஆடிக்கொண்டு இருக்கிறது” என்று தெரிவித்தார்.