விழுப்புரம் மாவட்டம் அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளருமான சி.வி.சண்முகம் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- “நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பான அரசின் சட்ட மசோதா கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அதை கவர்னர் திருப்பி அனுப்பியதை மீண்டும் அவருக்கு அப்படியே திருப்பி அனுப்ப தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. மேலும் நீட் தேர்வு குறித்து கவர்னர் எழுப்பி உள்ள சந்தேகங்களில் திருத்தம் செய்து அதை அவருக்கு மீண்டும் அனுப்பலாம். அவர் அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நீட் தேர்வு நீக்கப்பட வேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டில் உள்ளனர். உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு முரண்பாடாக சட்ட மசோதா உள்ளதாக கவர்னர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அரசு அப்போது ஜனாதிபதிக்கு அனுப்பிய சட்ட மசோதாவை ஜனாதிபதி திருப்பி அனுப்பி உள்ளார். அதற்கு என்ன செய்ய போகிறீர்கள் என்று அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேட்டார். இன்று கவர்னர் கூறியது போன்று அன்றைக்கு ஜனாதிபதி எந்த காரணமும் கூறவில்லை.
அப்போது ஏதாவது காரணங்கள் கூறி இருந்தால் அதை ஆராய்ந்து மீண்டும் சட்ட மசோதாவை சரிசெய்து அவருக்கு திருப்பி அனுப்புவோம் என்று பதிலளித்தோம். இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் வந்தது. திமுக ஆட்சிக்கு வந்துள்ளீர்கள். எங்களிடம் திட்டம் இருக்கிறது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒரே கையெழுத்து மூலம் நீக்குவோம். அப்போது சட்டமன்றத்திலும் தேர்தல் வாக்குறுதிகளும் கூறினீர்கள். அதன் அடிப்படையில் தற்போது ஒரு மசோதாவை கொண்டு வந்து கவர்னருக்கு அனுப்பி உள்ளீர்கள். அப்படி தாங்கள் இயற்றிய மசோதாவிற்கும், நாங்கள் இயற்றிய மசோதாவிற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் உள்ளது. நீங்கள் குழு அமைத்து அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் மசோதா கொண்டு வரப்பட்டதாக கூறியுள்ளீர்கள்.
அதுமட்டும் தான் வித்தியாசம் மற்றபடி நாங்கள் கூறிய காரணங்களை தான் நீங்கள் மசோதாவை இயற்றி அனுப்பி உள்ளீர்கள். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நாடு முழுவதும் நீட் தேர்வு நடக்கிறது. தமிழகம் மட்டும் தான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு நடத்தி வருகிறது. இதில் சரியான முடிவு எடுக்க தெரியாமல் திமுக மக்களையும் மாணவர்களையும் ஏமாற்றி அரசியல் செய்யக்கூடாது. 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் கடந்த ஆண்டு அரசுப்பள்ளியில் படித்த 436 மாணவ மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு 537 மாணவ மாணவிகள் மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளனர்.
இன்று நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற போகிறோம் என்று கூறி முதல்வர் ஸ்டாலின் நடிக்கிறார். கவர்னர் ஒப்புதல் இல்லாமலேயே நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை முன்னாள் முதல்வர் பழனிசாமி அவர்கள் சட்டமாக கொண்டு வந்துள்ளார். ஆட்சியிலும் அதிகாரத்திலும் 39 எம்பிக்களை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாமல் திமுக அரசு திணறி வருகிறது. இனிமேலும் காலம் தாழ்த்தாமல் மக்களை ஏமாற்றாமல் மாணவ மாணவிகளை குழப்பாமல் நீட் தேர்வில் விலக்கு பெற சட்டப்பூர்வமான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் காட்டமாக பேசினார்.