
மதுரை மாவட்டம் கள்ளிக்குடிக்கு அருகில் உள்ள சிற்றூர் கே.வெள்ளாகுளம். இந்த ஊருக்கு மேற்கே இயற்கையான குகைத்தளம் ஒன்று உள்ளது. இதில் சமணத் தடயங்கள் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து , ஆய்வு செய்த பாண்டிய நாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர் அருண்சந்திரன் ஆய்வு செய்த பின் கூறியதாவது,

இந்த குகைத்தளம் இயற்கையான அமைப்பாகும். இதன் காலம் 1500 முதல் 1800 வருடங்கள். உள்ளே சமணர் படுக்கைகள் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் மட்டும் நடந்துள்ளது. மொத்தம் ஏழு படுக்கைகள் அமைக்கும் பணி நடந்துள்ளது. நூல் பிடித்தது போல அழகாகவும் வரிசையாகவும் படுக்கைகளை அமைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு படுக்கையும் நான்கு அடி அகலத்தில் அமைத்திருக்கிறார்கள். குகைக்கு உள்ளே, குகைக்கு வெளியே என இரண்டு மருந்து அரைக்க பயன்படும் மருந்து குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. மழை பெய்தால் நீர் வழிந்தோட குகை தளத்தின் வாயிலின் தரைதளத்தில் சிறிய வாய்க்கால் போன்ற அமைப்பு காணப்படுகிறது. சிறப்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பணி ஏதோ காரணத்தால் பாதியில் நிறுத்தப்பட்டது.

தற்போது இந்த குகைக்குள் ஆஞ்சநேயர் சிற்பம் ஒன்று உள்ளது. இந்த குகையை உள்ளூர் மக்கள் பொந்துப்பாறை என்று அழைக்கிறார்கள். இந்த பாறையின் உச்சியில் முருகன் கோவில் ஒன்று உள்ளது. மேலும் இந்த பகுதியை ஆய்வு செய்தால் இன்னும் நிறைய விஷயங்கள் வெளிப்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.