கடந்த 2018ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி ராஜபாளையம் பகுதியில் ஒருவரிடம் இருந்த ரோகிணி என்ற பெண் யானை வனத்துறையினரால் மீட்கப்பட்டு, கோவை டாப்சிலிப் பகுதியில் உள்ள யானைகள் முகாமில் வைத்து பராமரிக்கப்பட்டுவந்தது.
நாளடைவில் யானையின் உடல் எடை குறைந்துவந்ததால், மருத்துவ குழுவானது யானையை சோதனை செய்தது. அதில், ராஜபாளையத்தில் அந்த யானை இருந்தபோது அலைச்சல் இன்றி ஒரே இடத்தில் வளர்ந்ததால் உடல் எடை குறையவில்லை என்றும், தற்போது யானை வனப்பகுதிக்கு வந்த பின் புதிய சூழலுக்குத் தன்னை ஆட்படுத்திக்கொள்வது, புதிய உணவு முறையை ஏற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், பல் வலி ஏற்பட்டதால் அதனால் உணவு உண்ண முடியாமல் யானையின் உடல் மெலிந்து 400 கிலோ வரை எடை குறைந்து, தற்போது 3,400 கிலோ எடையுடன் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து யானையைப் பழைய நிலைக்குக் கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக அந்த யானை, அங்கிருந்து திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே எம்.ஆர். பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்துக்குக் கொண்டுவரப்பட்டது. ஏற்கனவே இந்த மறுவாழ்வு மையத்தில் 8 யானைகள் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டுவருகின்றன. இதனிடையே, ரோகினி யானையும், பொள்ளாச்சியிலிருந்து இந்திரா என்ற மற்றொரு பெண் யானையும் இங்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டுவருகிறது.