தருமபுரம் ஆதீன விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவையில் இன்று (04/05/2022) எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவனஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "ஆதீனத்தில் வசிக்கும் 72 பேரும் விருப்பப்படி தான் பல்லக்கு தூக்குவதாகக் கூறுகின்றனர். தோளில் தூக்கிச் செல்வதில் மரியாதைக் குறைவு என்று எதுவும் கிடையாது. பக்தர்கள் தங்கள் குருநாதரை பல்லக்கில் அமரவைத்து மனமுவந்து சுமந்து வருவது ஒரு ஆன்மீக நிகழ்வு. பல்லக்கு தூக்குபவர்கள் பாரம்பரியமாக ஆதீனத்திற்கு சொந்தமான இடத்திலேயே வசித்து வருபவர்கள்.
தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசம் பாரம்பரியமாக நடைபெற்று வரும் நிகழ்வு. பழம்பெருமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டணப் பிரவேசம் நடைபெற்று வருகிறது. மத சுதந்திர உரிமை அடிப்படையில், பல்லக்கில் தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசம் செய்ய தடை விதிக்க முடியாது. எனவே, பாரம்பரியமாக நடந்து வரும் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்குவதற்கு விதித்த தடையை நீக்குங்கள்" எனத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்து பேசிய இந்து சமய, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, "பல்லக்கில் தூக்கத் தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் தருமபுரம் ஆதீனத்துடன் பேசி முதலமைச்சர் முடிவெடுப்பார். வரும் மே 22- ஆம் தேதி தான் பல்லக்கு தூக்கும் நிகழ்வு நடக்கிறது; அதற்குள் பேசி விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். சிலர் தாங்கள் செய்த தவறுக்காக பல்லக்கில் தூக்கத் தடை விதித்ததை அரசியலாக்கப் பார்க்கிறார்கள்" என்று குற்றச்சாட்டினார்.
தருமபுரம் ஆதீனத்தைப் பல்லக்கில் தூக்கத் தடை விதித்ததற்கு பேரவையில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., எதிர்ப்பு தெரிவித்தனர்.