Skip to main content

காவல்துறை பணியாளர்களிடம் நேரடியாக மனுக்களை பெற்ற டிஜிபி சைலேந்திரபாபு!

Published on 16/12/2021 | Edited on 16/12/2021

 

DGP Silenthrababu who received petitions directly from the police

 

தமிழ்நாடு முதலமைச்சரின் ‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் மூன்று நிலைகளில் மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் மீதான தீர்வுகள் வழங்கப்பட்டுவருகிறது. அதில் காவல்துறையில் பணியாற்றக் கூடிய அனைத்து நிலை அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்களுக்கும் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு 38 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், 7 ஆணையரகங்களில் காவல் துணை ஆணையர்களால் 5,236 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டன. அவர்களால் தீர்க்கப்படாத மனுக்கள், 11 சரக காவல்துறை துணைத் தலைவர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களால் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டன.

 

கடந்த 3ஆம் தேதி அன்று வடக்கு மண்டல காவலர்களின் 300 மனுக்கள் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபுவால் பெறப்பட்டன. கடந்த 8ஆம் தேதி சென்னை மாநகர காவலர்களின் 848 மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதனைத் தொடர்ந்து இன்று (16.12.21) மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்கள் மற்றும் திருச்சி மாநகர காவலர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்யும் முகாமானது நடைபெற்றுவருகிறது. அதில் கலந்துகொண்ட மாநகர காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு 600 மனுக்களைப் பெற்று அதற்கான தீர்வுகளைக் கண்டறிந்துவருகிறார். மேலும், தெற்கு மண்டலத்திற்குச் சென்று காவலர்களின் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்துவருகிறார்.

 

DGP Silenthrababu who received petitions directly from the police

 

அதேபோல் வருகிற 18ஆம் தேதி மேற்கு மண்டலத்தில் காவலர்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெற திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் நவம்பர் 2021வரை நேரடியாக காவலர்கள் மற்றும் அலுவலர்களிடமிருந்து 1,340 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 1,058 கருணை மனுக்கள், அவற்றில் 366 மனுக்கள் மீது தண்டனையை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. 50 பேர் பணிக்குத் திரும்ப எடுக்கப்பட்டிருக்கிறார்கள். 64 பேரின் தண்டனை குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும், ‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் மாவட்ட மண்டல அளவில் காவலர்கள் குறைகள் கேட்கப்பட்டு காவல்துறை தலைமை இயக்குநர் மனுக்களைப் பரிசீலனை செய்து 1,353 காவலர்களுக்கு அவர்களின் விருப்பப்படி சொந்த மாவட்டங்களுக்குப் பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

 

காவல்துறை தலைமை இயக்குநர் மூலம் தீர்வு காணப்படாத காவலர்களுடைய புகார் மனுக்கள் முதலமைச்சரிடம் நேரடியாக சமர்ப்பிக்கப்பட உள்ளன. காவலர்களின் மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்படும் முகாமில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், திருச்சி மத்திய மண்டல ஐஜி சரவணன் சுந்தர், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார்,  தஞ்சை மாவட்ட டிஐஜி பிரவேஸ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்